பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
109
 

பொருளைக் கேட்டு, கம்பர் திடுக்கிட்டார். ஏனென்றால் கம்பர் எண்ணி எழுதிய பொருளுக்கு நேர் விபரீதமாக இருந்தது அவர்கள் தாமாகக் கற்பித்துக் கூறிய பொருள். சோழனும் 'அந்த மற்ற புலவர்கள் கூறிய பொருளே ஏற்றதாக இருக்கிறது' என்ற கருத்தோடு பேசினான். அதோடு மட்டுமின்றி அவர்கள் பலவந்தப் படுத்திக் கற்பித்த அந்தப் பொருளால் பாட்டை எழுதிய கம்பருக்கே அறியாமைப் பட்டத்தைக் கட்டிவிடப் பார்த்தார்கள். சோழனும் அதை ஆதரித்ததுதான் கம்பரை வருந்தச் செய்தது.

அவர் தமக்கு அதனால் தோன்றிய சினத்தையும் வருத்தத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிதானமாக அவையில் எழுந்திருந்து தாம் பாடிய பாட்டின் உண்மையான பொருளை விளக்கிப் பேசி, ‘அவர்கள் கருதியது அசம்பாவிதமானது, பொருந்தாதது' என்று தக்க சான்றுகளால் எடுத்துக் காட்டினார். ஆனால் அப்படி அவர் விளக்கிப் பேசிய பின்னும் சோழனும் அவர்களும் தாங்கள் கூறிய பொருளே அதற்குப் பொருளாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வாதிட்டனர். அவர்கள் பிடிவாதத்தால் கம்பர் மனச் சான்றையே வஞ்சித்து வதைசெய்ய ஆரம்பித்தார்கள். ஒரு கவிக்கு அவன் சொந்த உயிரைக்காட்டிலும் உயர்ந்த பொருள் அவனுடைய சிருஷ்டி. தனக்குத் துன்பம் ஏற்படுவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் தன் சிருஷ்டியின் அழகைக் குலைத்து விபரீதம் செய்பவர்களை அவனால் பொறுத்துக் கொள்ளவோ, மன்னித்துவிட்டு விடவோ முடியாது. கம்பரும் அப்போது இதே நிலையில்தான் இருந்தார். தன்னை அன்போடு வரவேற்று. ‘என்னிடம் சில நாள் விருந்தினராகத் தங்கி மகிழ்விக்க வேண்டும்’ என்று கேட்டு உபசரித்த சோழவேந்தனே அப்படிப் பொருளைப் பேதம் செய்து காட்டியதுதான் கம்பரைப் பெரிதும் புண்படுத்தியது. -

விஷயம் அதோடு முடிந்திருந்தால் கூட கம்பர் சினங் கொண்டு சீறி எழுந்திருக்க விரும்பியிருக்க மாட்டார்.அவர்களை மறுத்து, கம்பர் உண்மையை எடுத்துச் சொல்லி முடித்தவுடன் சோழன் வெம்மையான சொற்களால் வெறுப்போடு கூறிய அந்த மறுமொழி தான் அமைதியைக் குலைத்துவிட்டது.