பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
127
 

அம்பிகாபதியைக் கடிந்து கொண்டார்.'என்ன நிகழுமோ' என்று அஞ்சினார். சோழ வேந்தன் கடுஞ்சினங் கொண்டிருந்தான்.

'அரச குலத்தைச் சேர்ந்த தன் மகள் ஆஸ்தான கவியின் மகனைக் காதலிப்பதா? திறமையிருந்தாலும் ஏற்றத் தாழ்வு ஏற்றத் தாழ்வுதானே? என்று சீறியது அரசன் மனம், முடிவில் சோழ வேந்தன் தன்னுடைய பேரவையில் "பரம்பொருளுணர்ச்சி தோன்ற நூறு கவிதைகளைப் பாடினால் அம்பிகாபதியைத் தண்டிக்காமல் விடுதலை செய்து விடுகிறேன்” என்று சொன்னான். இந் நிபந்தனையை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். நிபந்தனையில் வழுவினால் அம்பிகாபதி உயிரிழக்க நேரிடும்.

நிபந்தனை நடக்க வேண்டிய நாளில் அவையில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. அம்பிகாபதியின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படியாக அவன் அமர்ந்திருந்த மேடைக்கு நேரே எதிர்ப் புறத்தில் மேல் மாடத்தின் உப்பரிகையில் அமராவதி வீற்றிருந்தாள். அவன் ஒரு பாட்டுப்பாடி முடிக்கவும் அவள் ஒரு மலரை எடுத்துக் கீழே தன் பக்கத்தில் எண்ணிக்கைக்கு அறிகுறியாக வைத்துக் கொண்டாள். இந்த அடையாளத்தைக் கொண்டே அம்பிகாபதியும் பாடல்களை எண்ணிக் கணக்கிட்டு மேலே பாடி வந்தான். எப்போதுமே முதலாவதாகப் பாடும் காப்புச் செய்யுளை எண்ணிக்கையோடு சேர்த்துக்கொள்ளும் வழக்கமில்லை.இதை அமராவதி அறியாள்.எனவே அம்பிகாபதி தெண்ணுாற்றொன்பதாவது பாடல் முடிந்ததும் காப்புச் செய்யுளையும் சேர்த்து எண்ணிக் கொண்டு நூறாவது மலரைக் காட்டி முடிந்து விட்டது என்பதற்குரிய சைகையை அவள் அவனுக்குத் தெரிவித்துவிட்டாள். அம்பிகாபதி அவளுடைய அழகுத் தோற்றத்தில் ஈடுபட்டிருந்ததனாலும் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் அவளையே நம்பி இருந்ததாலும் முடிந்து விட்டது என்று எண்ணிப் பாடுவதை நிறுத்திவிட்டான். மகிழ்ச்சிக் களிப்பினால் அமராவதியின் கண்களும் அவன் கண்களும் உறவாடின.