பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
128
தமிழ் இலக்கியக் கதைகள்
 

அவையில் அமைச்சர்களும் பிற புலவர்களும் பாடலைக் கணக்கிட்டு வந்தனர். இறுதியில் அம்பிகாபதி நிபந்தனையிலிருந்து விலகிய தவறு வெளிப்பட்டது. 'நிபந்தனையின் வெற்றி காதலுக்கே வெற்றி' என்று கனவு கண்டு கொண்டிருந்த காதலர்கள் திகைத்தனர். அம்பிகாபதி உயிரிழப்பது உறுதி என்று தெரிந்து அமராவதி உயிர்விட்டாள். கம்பர் எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல் சோழன் அம்பிகாபதியைக் கொலை செய்யச் சொல்லி ஆணையிட்டு விட்டான். இரண்டு காதலர்களின் உயிரும் இந்த உலகிலிருந்து ஒன்றாய்ப் பிரிந்து வானுலகு சென்றன." இதுதான் அம்பிகாபதியின் அமரகாவியம்,

இதை விளக்கும் பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் மிகுதியாக உள்ளன.அவைகளிலிருந்து இந்த வரலாற்றின் சுருக்கம் கிடைக்கிறது. அதிலும் தன் மகன் இறந்தபோது பெற்ற பாசம் உந்தக் கம்பர் பாடியதாகக் காணப்படும் செய்யுள் உருக்கந்தோய்ந்த சொற்கோவையாக அமைந்திருக்கிறது.

கம்பர் தாமே பாடிய இராமாவதாரக் கதை நிகழ்ச்சியோடு தம் மன நிகழ்ச்சியையும் ஒப்பிட்ட நிலையுடன் சோகமயமான அந்தச் செய்யுளைப் பாடுகிறார்.

“இராமன் காடு செல்வான் என்ற உணர்வு தோன்றிய மாத்திரத்தில் தசரதன் தன்னுயிரையே இழந்துவிட்டான். பெற்ற பாசத்தின் வேகம் அவனை அவ்வளவு உணர்ச்சித் தாக்குதலுக்கு ஆளாக்கிவிட்டது. ஆனால் நானோ என் மகன் அம்பிகாபதி இறந்த பின்னும் உயிர் விட மாட்டாமல் நெஞ்சு வேதனையும் தீராமல் திண்டாடுகின்றேன். என் நெஞ்சுக்குத்தான் எவ்வளவு உரம்? என்ன கல் நெஞ்சம் இது? இதற்கு உவமை காவியங்களில் கூடக் கிடைக்காதே!?” என்ற கருத்தோடு அப்பாடல் எழுந்துள்ளது.

“பரப்போத ஞாலம் ஒரு தம்பி ஆளப் பனிமதியம்

துரப்போன் ஒரு தம்பி பின்வரத் தானும் துணைவியுடன்

வரப்போன மைந்தர்க்குத் தாதை பொறாதுயிர் மாய்ந்தனன் நெஞ்

சுரப்போயனக்கு இங்கு இனியார் உவமை உரைப்பதற்கே"