பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

135

கவனிக்கிறார் என்பதைப் பார்த்தவுடன் புலவர் முகத்தில் மலர்ச்சி தென்பட்டது. அதே சமயத்தில் மணலில் எழுதியிருந்ததைப் படித்துவிட்டுத் தலை நிமிர்ந்த முதலியார் சிரித்த முகத்தோடு புலவரை நோக்கினார். புலவரின் கண்களிற் புதிய ஒளியும் முகத்தில் மலர்ச்சியும் இதழ்க்கடையிற் குறுநகையும் கண்டார் முதலியார். புண்ணியகோட்டி முதலியாரின் அந்தப் பார்வை மணலில் தாம் எழுதியிருந்த பொருளைத் தமக்குக் கிடைக்கும்படி செய்யும் என்ற நம்பிக்கையைப் புலவருக்கு ஊட்டியது. அந்த நம்பிக்கை தூண்ட முதலியாரின் பார்வையிலிருந்த வியப்புக்கு விடை போல ஒரு பாடலைப் பாடினார் புலவர்.

“நள்நிலத்(து) உறும் ஏழை மாந்தர்காள்! நீவிர்
வேண்டுவன இன்புறீஇ
நேரிற் கேள்மின் அவை
தருவன் யான் அலதும்
நாணில்எத் தினமும் நல்லமனையின் முன்வாயிலல்லி
நன்மணல் மிகுதிகொட்டியே
நாம் பரப்பியும் இங்கிருக்கின்றோம் நனிநாடி
வந்தே அதனை எழுதுமின்
காணில் அங்கு உடனருள்வம் என்ன அவன்
கட்டளைப் படியும் திட்டமாகவே
கையினால் எழுத உவகையோடு பொருள்
கண்டளித்த பிரபு யார் எனில்
பூணிலங்கும் ஒளிர் வரநதி குலத்தில்வரு
புண்யனான திகண்யனும்
புலவர் போற்று மாகறலின் மேவுமெழில்
புண்ணிய கோட்டியாம் நல்பூபனே.!”

இன்புறீஇ = இன்புறுவித்து, கேள்மின் = கேட்பீர்களாக, தருவன் = கொடுப்பேன். அலதும் = அன்றியும், நாணில் = நாணமுற்றால், அருள்வம் = ஆளிப்போம், உவகை = மகிழ்ச்சி, பூண் = அணிகலன்கள், இலங்கு = விளங்கும், மாகறல் = ஊர்.