பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
138
தமிழ் இலக்கியக் கதைகள்
 

சொன்னார்கள். "ஆட்சியை மேற்கொண்டிருக்கும் முடியணிந்த அரசன் ஒருவனுக்கு ஆகாது என்று விலக்கப்பட்ட அமங்கலச் செயல்கள் பல உண்டு. அவைகளை அவன் செய்தால் தன் திருவையும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும். அரச பரம்பரையினர் தொன்று தொட்டு இக்கொள்கையை அனுசரித்து வருகின்றனர். நாங்கள் எல்லாமறிந்த தங்களிடம் இதை எடுத்துக் கூறுவதற்காக எங்கள்மேல் சினங்கொள்ளக் கூடாது. இது எங்கள் கடமை, அந்தகக் கவி வீரராகவ முதலியார் சிறந்த புலவர்தாம். அவரைப் பாராட்டுவதிலும் போற்றுவதிலும் எங்களுக்கும் மகிழ்ச்சி உண்டு; அதை நாங்கள் மறுக்கவில்லை. அன்போடு ஏற்றுக்கொள்வோம். ஆனால் அவர் ஒரு குருடர். அவரைத் தாங்களே நேரடியாகச் சந்தித்து வரவேற்பதோ, பேசுவதோ அமங்கலம். அது தங்கள் மங்கலத்திற்கு இழுக்கு." இப்படி அமைச்சர்கள் கூறியபோது பரராச சிங்கனுக்கு மிகுந்த சினம் வந்துவிட்டது.

"மங்கலமாவது, அமங்கலமாவது நீங்கள் சொல்கிறபடி செய்தால் ஒரு பெரிய புலவரை வற்புறுத்தி அழைத்து வந்து அவமதிப்புச் செய்து திரும்பி அனுப்புதலாக அல்லவா முடியும்? இதனை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.” ஆத்திரமும் படபடப்பும் கொண்ட பரராசசிங்கன் இவ்வாறு அமைச்சர்களுக்கு மறுமொழி கூறினான். இவ்வாறு அரசருக்கும் அமைச்சர்களுக்கும் வாக்குவாதம் வளர்ந்து கொண்டிருந்த போதிலும் புலவரை வரவேற்கக் குறித்திருந்த நேரமும் நெருங்கிவிட்டது.

ஒரேயடியாக அமைச்சர்களிடமும் முகத்தை முறித்துக் கொள்ளவும் பரராசன் துணியவில்லை. இறுதியில் அவர்கள் கூறிய இருதரப்பார்க்கும் துன்பம் அதிகமில்லாத ஒரு முடிவை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகப் போயிற்று. அரசன் புலவருடைய அண்மையிலிருந்தே அவரை வரவேற்றுப் பேசுவது போலவே பேசிப்பாராட்ட வேண்டியது, ஆனால் அப்போது அரசனுக்கும் புலவருக்கும் இடையே ஒரு மெல்லிய பட்டுத் திரை தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். புலவர் குருடராகையால்