பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நா. பார்த்தசாரதி - 141.

'சொற்களில் சித்திரம் வரைய முடியுமா? அந்தச் சித்திரத்தில் உணர்வின் சாயல்களைக் காட்ட முடியுமா? அந்தச் சாயல்களில் மென்மையும் துணுக்கங்களும் அமைய முடியுமா?’ என்றெல்லாம் சந்தேகப் படுகிறவர்கள் சிலர் இருக்கலாம். ஆனால் ஆழ்ந்து ஈடுபடுகிறவர்களுக்குக் கவிதை அனுபவம் இன்பமயமானது.

பலவகை வண்ணங்களைக் குழைத்து வரையும் சித்திரம் போல் சொற்களில் வரையும் சித்திரம் ஒன்று உண்டு. சொற்களிலும் வண்ணம் இருக்கிறது. சொல்லுக்கு மாற்றுக் குறையாத ஆற்றல் உண்டாகும் விளைவுதான் மந்திரம். கவிதையிலும் மந்திரச் சொல்லாற்றல் அமைவதுண்டு.

பொதுவாகக் கவிகள் சொல்லில் இன்பமிருக்கிறது என்கிறார்கள்.வேதாந்திகள் சொல்லில் மெய்யுணர்வு விளைகிறது என்கிறார்கள். சொற்பொருளில் மட்டும் ஆழமிருக்கிறது என்கிறார்கள், தர்க்கமும் தத்துவமும் வல்லவர்கள்.

ஆனால் சிறப்பாகத் தேர்ந்த கவிஞன் சொல்லிலும், பொருளிலும் சுவையிலும் எல்லாவற்றிலும் இன்பமிருக் கிறதென்று நிருபிக்கிறான். சித்திரக்காரர்களுக்குத் தமிழில் 'கண்ணுள் வினைஞர்' என்று ஒரு பெயர் இருக்கிறது. தாம் செய்யும் தொழிலைக் காண்பார் கண்ணுள் நிறையும்படி ஆற்றுவதால் சித்திரக்காரர்களுக்கு இந்தப் பெயர் இட்டிருந்தார்கள். கவிகளோ தமது தொழிலை அநுபவிப்பவர்களின் கண்களிலும் மனத்திலும் சிந்தனையிலும் நிறையச் செய்து விடுகிறார்கள். அப்படி நிறையச் செய்யும்போது சொற்களிலும் சித்திரம் பிறப்பதைக் காண்கிறோம்.

இதோ அத்தகையதொரு சொற்சித்திரம்.

பழைய நாளில் மாவலிவாணன் என்று ஒரு மன்னன் இருந்தான். அவனுடைய நகரம் தென்மதுரை. ஒருமுறை அவன் போருக்குப் போயிருந்த போது போர் முடிந்து நகருக்குத் திரும்பி, வரக் காலதாமதமாயிற்று. அப்போது கார்காலம் மழை பெய்து எங்கும் குளிரும் ஈரமும் குலாவுகிற பருவம். வானில் மின்னல்கள் வாள் சுழல்வது போல் ஒளிக் கோலமிடுவதும் இடி இடிப்பதும்