பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
142
தமிழ் இலக்கியக் கதைகள்
 

மழை பெய்வதுமாக இருந்த அந்தச் சூழ்நிலையில் எவருக்கும் வெளியேறிச் செல்லத் தோன்றவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடப்பதில் சுகம் காணும் பருவம்.

மாவலிவாணனைப் பிரிந்து வாடிய அவன் காதலி கூறியதாகக் கற்பனை செய்து ஒரு கவிஞர் கவிதை பாடியிருக்கிறார்.பிரிவின் தாபத்தைச் சொற் சித்திரமாக வரையும் அழகிய கவிதை இது. சொல்லிச் சொல்லி இன்பமடையும் வார்த்தைகளால் ஆக்கப்பட்ட கவிதைகளை எத்துணை முறை படித்தாலும் சலிப்பதில்லை. சில வைரக் கற்களின் அழகு, அவை நகைகளில் பதிக்கப் பெற்ற பின் பெருகும்.அதுபோல் தனித்தனியே இருந்த சொற்கள் மாவலிவாணனைப் பிரிந்து அவன் காதலி உருகுவதாகப் பாடப்பெற்ற இப்பாடலில் அழகு பெருகும் சித்திரமாக இணைந்திருக்கின்றன.

“கன்னல் எனும் சிறுகுருவி சுகனமழைக் காற்றாமல்

மின்னல் எனும் புழுவெடுத்து விளக்கேற்றும் கார்காலம்

மன்னவனாம் தென்மதுரை மாவலி வாணனைப் பிரிந்திங்(கு)

என்ன பிழைப் பென்னநகைப் பென்னவிருப்பின்னமுமே.”

முதல் இரண்டு அடிகளில் கார்காலம் சித்திரமாக்கப் பட்டிருக்கிறது. 'மின்னல் எனும் புழு எடுத்து விளக்கேற்றும்’ என்று இழுத்துப் படிக்கும்போது நம் கண் முன்னால் மேகமும் மின்னலும் சித்திரமாய் வந்து நிற்கவில்லையா? "என்ன பிழைப்பு? என்ன நகைப்பு? என்ன விருப்பு? என்று ஒவ்வொன்றாக அடுக்கும்போது சோகம் தொனிக்கும் அழகைத்தான் எப்படி விவரிக்க முடியும்? என்ன விருப்பு என்று வைத்துக் கொண்டாலும் சரி, என்ன இருப்பு என்று பிரித்தாலும் சரி, எப்படிப் பார்த்தாலும் அழகுதான். கடைசி அடியை அனுபவித்துப் படிக்கும்போது கன்னத்தில் கையூன்றியபடி சோகமே உருவாக அமர்ந்து 'என்ன பிழைப்பு என்ன நகைப்பு? என்ன இருப்பு?’ என்று ஆற்றாமையோடு கேட்கும் ஒரு பெண்ணின் தோற்றம் நம் கண்முன் சித்திரம் போல் தோன்றுகிறதே, இது அல்லவா மந்திரம்போற் சொல்வின்பம்.