பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தமிழ் இலக்கியக் கதைகள்

சமயத்திலே அளவற்ற பற்று உண்டு. திருஞான சம்பந்தர் என்றால் தம் உயிரினும் இனிதாகக் கருதுபவர். தன்மானப் பண்பு மிகுதியாக உள்ள புலவர் அவர். -

அருள் வலிமையால் கவி பாடும் ஆற்றலும் சமயப் பற்றும் மிகுந்த தத்துவப் பிரகாசருக்கு இலக்கணமும், மொழி மரபும் தெரியாதென்று சொல்லிப் புரளி பண்ணி அவரை வம்புக்கு இழுத்தார்கள் சிலர். அப்போதெல்லாம் சுடச்சுடப் பாட்டிலேயே பதில் சொல்லி அந்த வம்பர்களை மடக்கினார் அவர்.

தத்துவப் பிரகாசருக்குத் துணிச்சலும் துடுக்குத் தனமும் அதிகம். எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னனுக்கு முன்னால் கொண்டு போய் விட்டாலும் உண்மையைக் கூசாமல் குழையாமல் கன்னத்தில் அறைவதுபோல் சொல்லி விடுவார். இதனால் புலமைத் துறையில் அவருக்கு ஏற்பட்ட பகைகளும் எண்ணற்றவைதாம். சாளுவ நாயக்கரைச் சந்திக்க வேண்டுமென்று தத்துவப் பிரகாசருக்கு வெகுநாட்களாக ஓர் ஆசை இருந்தது. ஒருநாள் மாலை நேரத்தில் புறப்பட்டுப் போய்ச் சாளுவ நாயக்கருடைய மாளிகையை அடைந்தார் அவர்.அரசப் பிரதிநிதி வசிக்கும் மாளிகை என்றால் சாதாரணமாகவா இருக்கும்? அங்கே ஆடம்பர ஆரவாரங்களுக்கு ஒன்றும் குறைவே இல்லை.

பழுத்த மரம் மேட்டிலிருந்தால் என்ன? பள்ளத்தில் இருந்தால் என்ன? அதை நாடிச்சென்றால்தானே பறவைக்குப் பசி தீரும். புலமை வாழ்க்கையும் அத்தகையதுதானே? ஆடம்பர ஆரவாரங்களைப் பார்த்துக் கூச்சப்பட்டுக் கொண்டு சும்மா இருந்து விட்டால் வயிறு நிறையுமா?

தத்துவப் பிரகாசருக்குத்தான் கூச்சம் இருந்ததே இல்லையே. துணிவாகப் போனார். சாளுவ நாயக்கரைச் சந்தித்தார். சிரிக்கச் சிரிக்கப் பேசினார். அளவளாவினார். இலக்கியக் கருத்துக்களைக் கடல் மடை திறந்தாற் போல் அள்ளிவிட்டார்.

ஆனால் தத்துவப்பிரகாசர் சிரித்துக் கலகலப்பாகப் பழகிய அளவுக்குச் சாளுவ நாயக்கர் பழகவில்லை.அளவாகச் சிரித்து