பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
146
தமிழ் இலக்கியக் கதைகள்
 

நிறைந்திருந்த பொருள் புழுதி. எஞ்சிய கால் பகுதியில் மூட்டைப்பூச்சி. இடிந்த சுவர்கள். காரை பரியும் மேல் விட்டம். புலவருக்குப் படுப்பதற்காகப் போட்டிருந்த பாய்களோ கிழிந்து அழுக்கேறியவை. தலையணைகள் வைக்கோல் திணித்துச் செய்யப்பட்ட பீற்றல் தலையணைகள் தையல் கிழிந்திருந்ததால் குச்சி குச்சியாக வைக்கோல் துருத்திக் கொண்டிருந்தது தலையணைகளில்.

புலவர் தத்துவப்பிரகாசர் தன் உடன் வந்த காவற்காரனைப் பார்த்துக் கேட்டார். "ஏனப்பா! நாயக்கர் எனக்காக அரும்பாடுபட்டு இந்த அருமையான வீட்டைத் தயார் செய்தார் போலிருக்கிறது. இதோ ஒரு பாட்டு எழுதிக் கொடுக்கிறேன். அதைக் கொண்டுபோய்ச் சாளுவ நாயக்கரிடம் கொடுத்துவிடு. அதோடு வீட்டையும் பூட்டிச் சாவியையும் கொண்டு போய்க் கொடுத்துவிடலாம். நான் இங்கே படுக்கப்போவதில்லை. ஊருக்குப் போய்விட்டு வருகிறேன் என்று அவரிடம் சொல்.”

தத்துவப் பிரகாசருடைய பேச்சிலிருந்த கோபக் குமுறலைக் கண்டு காவற்காரன் பயந்து விட்டான்.

"மூட்டை கலம், புழுதி முக்காலும் சுத்தப்பாழ்

வீட்டை விடுதியாய் விட்டாயே - போட்ட

தடுக்கெல்லாம் பீறல் தலையணையோ வைக்கோல்

படுக்கலாமோ சொல்லப் பா.”

              (பெருந்தொகை 1640) 

உள்ளத்தில் பொங்கிய கொதிப்பின் வேதனை ஒலையில் வடிந்து உருப்பெற்றது. -

"கொண்டு போய் உன் எஜமானன் முகத்தில் விட்டெறி" என்று பாட்டெழுதிய ஓலையையும், வீட்டின் சாவியையும் சேர்த்துக் காவற்காரன் முன்னால் வீசி எறிந்து விட்டு அன்றிரவே துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஊர் திரும்பினார் தத்துவப் பிரகாசர்.