பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழ் இலக்கியக் கதைகள்

சொல்லிவிடத் தக்க தோற்றம் அவருக்கு. கையில் ஏடும் எழுத்தாணியும் சேர்த்துக்கட்டி வைத்துக் கொண்டிருக்கும் சுவடிக் கட்டைப் பார்த்தாலே, இவர் புலவராகத்தான் இருக்க வேண்டுமென்று கூறிவிட முடியும்.

பசியோடும் சிந்தனையோடும் சோர்ந்து போய் உட்கார்ந் திருந்த புலவரை ஏனென்று கேட்க ஆளில்லை. ஆரவாரம், கோலாகலம், சிரிப்பு, கேலிப் பேச்சுக்கள், கும்மாளம் எல்லாம் சுற்றியிருந்தன. சந்தனமும் அகிற்புகையும் மணந்தன. புலவருடைய மனம் மணக்கவில்லை. வயிறு மணக்கவில்லை. திருமணத்துக்கு வந்திருந்த எல்லோரும் வீட்டிலிருந்தவர்களால் வரவேற்கப் பட்டார்கள். “சாப்பிட்டீர்களா? சாப்பிடுகிறீர்களா? தாம்பூலம் வாங்கிக்கொண்டீர்களா?” என்றெல்லாம் தணிவான குரல்களால் வந்தவர்கள் அன்போடு விசாரிக்கப்பட்டார்கள்.

திண்ணையில் பாயில் உட்கார்ந்திருந்த அந்தப் புலவரை மட்டும் யாரும் விசாரிக்கவில்லை. அழையா விருந்து போல் அநாதைபோல் உட்கார்ந்து கொண்டிருந்தார் அவர்.

காதை அடைக்கிற பசி, கண்கள் பஞ்சடைகிறார் போன்ற நிலை. ‘கொஞ்சம் தண்ணீரையாவது கேட்டு வாங்கிக் குடிப்போம்’ என்ற எண்ணத்துடன் சந்தன்மும் தாம்பூலமும் கொடுத்துக் கொண்டிருந்த ஓர் இளைஞனைக் கூப்பிட்டு, “தம்பி! குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு. தாகம் நாவை வறட்டுகிறது” எனக் கேட்டார் புலவர்.அந்த இளைஞனுக்கு அவர் அவ்வளவு கூட்டத்துக்கு நடுவில் ‘தம்பீ’ என்று கூப்பிட்டது பிடிக்கவில்லை. அவன் புலவரைப் பார்த்து அலட்சியமாக முகத்தைச் சுளித்தான். ஏழையைக் கண்டால்தான் மோழையும் பாயுமே! புலமை உள்ளம் கொதித்தது.தன் அறிவு வேண்டுமென்றே புறக்கணிக்கப் படுவதாகத் தெரிந்தால் எந்த அறிவாளியும் உலகத்தின் முகத்தில் கரி பூசத் தயங்க மாட்டான். வயிற்றுக்கு இல்லையே என்பதுகூடப் பெரிய கவலை இல்லை புலவருக்கு. வள்ளல்,குபேரன்,கருணைக்கடல் என்று புகழ் பெற்ற புங்கனூர்க் கிழவன் வீட்டில் ஒரு தமிழ்ப் புலவனை ‘வா’ வென்று வரவேற்க ஆளில்லை. அவன் வாய் விட்டு, மனம் விட்டுக் கேட்ட