பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

149

பின்னும் இலட்சியம் செய்து ஒரு குவளைப் பச்சைத் தண்ணீர் கொடுக்க அங்கு ஆளில்லை.

ஆத்திரத்தோடு புலவன் நினைத்தான்:

என்னுடைய வெறும் வார்த்தையை இங்கே கேட்பாரில்லை; கவனிப்பாரில்லை. இந்தத் திருமண வீட்டில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான விருந்தினர்களும், வீட்டுக்குரியவனும் என்னையே நினைத்துப் பதறும்படி செய்ய என் வார்த்தைகளுக்கு ஆற்றல் உண்டா, இல்லையா என்று பார்க்கிறேன். என்னை ஒரு மனிதனாகவே நினைத்துப் பொருட்படுத்தாமல் இருக்கும் இவர்களை நான் போகுமிடத்துக்குத் தேடிக்கொண்டு ஓடிவரச் செய்கிறேன்.

அவன் மனத்தில் வைரம் எழுந்தது. ‘அழகான புங்கனூர் வெண்ணெயைத் திருடியுண்ட குற்றத்துக்காக யசோதையிடம் அடி வாங்கிக்கொண்டு, கையிலிருக்கும் திருட்டு வெண்ணெயையும், தாயின் சினம் மிக்க கண்களையும், தன் உடம்பில் அடிபட்ட புண்களையும் மாறி மாறி மருண்டு நோக்கும் கண்ணன் (திருமால்) கோவில் கொண்டிருக்கும் ஊர். அதற்கெல்லாம் ஒன்றும் குறைவில்லை. அப்படிப்பட்ட இந்த ஊரில் புங்கனுார்க் கிழவனின் வயல்களில் சேல் மீனும் கயல் மீனும் துள்ளிக் குதிக்கும் அத்தனை நீர் வளம் இருக்கிறது. ஆமாம்! நீர் வளம் வயலிலும், குளத்திலும் தான். இங்கே ஒரு குவளை நீர் கொடுக்க மனிதர் இல்லை.திண்ணை இருக்கிறது; விரித்த பாய் இருக்கிறது. பிறரைக் கவனிக்காத அலட்சிய மனம் நிறைந்த மனிதர்கள் இருக்கிறார்கள். கல்யாணத்துக்கென்று வந்த என் போன்ற ஏழைப் புலவனுக்குப் பசி வயிற்றைப் புரட்டுகிறது. உடம்பு குரங்கு வாதம் பிடித்தது போல் வசம் இழக்கிறது. பிரமாதமான இந்தத் திருமணத்தின் சிறப்பான அம்சம் ஒரு புலவனின் வயிற்றுப் பசி.

சிந்தித்த பின் முகத்தில் உறுதி ஒளிர, உடலில் தெம்பு பாயக் கையிலிருந்த சுவடியைப் பிரித்து ஏடும் எழுத்தானியும் எடுத்தான் புலவன். சிரித்துக் கொண்டே எழுத்தாணியால் ஏட்டில் எதையோ எழுதினான். திண்ணையில் இருந்த மாடப்பிறையில் எல்லோர்