பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
150
தமிழ் இலக்கியக் கதைகள்
 

கண்களிலும் படும்படியாக அந்த ஏட்டை வைத்தான். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தெருவில் இறங்கி நடந்து விட்டான்.

அவன் போன கால் நாழிகைக்கெல்லாம் கலியான வீடு அமளி துமளிபட்டது. மூலைக்கு மூலை கூட்டம் கூடிப் பேசிக் கொண்டு நின்றார்கள்.

“எவனோ புலவனாம். கோபத்தில் ஏதோ வசை பாடல் எழுதி வைத்து விட்டுப் போய் விட்டானாம். புலவன் வாக்குப் பலிக்காமற் போகாதாம் அமங்கலமாக ஏதாவது நடந்து விடக் கூடாதே" என்று எல்லோரும் பயந்தார்கள். சிறிது நேரத்துக்கு முன் எந்த மனிதனுடைய வார்த்தை ஒரு குவளைத் தண்ணிருக்காக அலட்சியப்படுத்தப்பட்டதோ அந்த மனிதனுடைய பாட்டில் இருந்த வார்த்தைகள் கலியான வீட்டிலேயே கலவரத்தை உண்டாக்கி விட்டிருந்தன. வீட்டுக்குத் தலைவனான புங்கனூர்க் கிழவனே அந்த ஒலையை வைத்துக்கொண்டு பயந்துபோய் நின்றான். -

"ஐயோ! யாராவது ஒருவர் அந்தப் புலவரைக் கவனித்து உபசாரம் செய்திருக்கக் கூடாதா? இப்படி அமங்கலச் சொல் அமையப் பாடி வைத்து விட்டாரே. இதன் விளைவு என்ன ஆகுமோ? அறிவாளியின் கண்ணிர் உலகத்தை அழிக்கும் பிரளய வெள்ளமாயிற்றே! என் வீட்டிலா இப்படி நடக்க வேண்டும்? 'புங்கனூர்க் கிழவன் திருமணத்தில் தமிழ்ப் புலவரை அவமதித்தான்’ என்று தலைமுறை தலைமுறையாக இலக்கியத்தில் நிலைத்து நின்றுவிடுமே, இந்தப் பழி' என்று கிழவன் மனம் நொந்து பரிதாபமாகக் கதறினான்.

கதறி என்ன செய்ய? அந்த வள்ளல் கதறிக் கொண்டிருந்த அதே சமயத்தில் அப் புலவன் ஆற்றங்கரையில் தண்ணீர் குடித்துவிட்டு உடலின் தாகத்தைத் தணித்துக் கொண்டும் அவமானப்பட்டு வெந்த நெஞ்சின் தாகம் தணியாமல் நடந்து கொண்டிருந்தான். வயிற்றில் பசியிருந்தாலும், கண்களில் ஒளி பஞ்சடைந்திருந்தாலும், கால்கள் நடக்க முடியாமல் தள்ளாடினாலும் அவன் உள்ளத்தில் ஒரு பெருமிதம் ஏற்பட்டது: