பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நா.பார்த்தசாரதி

151

"நான் புலவன்! என் துன்பங்களை இலக்கியமாக்க என்னால் முடியும். நான் வயிற்றுக்காக வாய் திறந்து கேட்டால் அவமானம். ஆனால் பாடுவதற்காக வாய் திறந்தால் உலகத்தையே கட்டி வைத்து உதைக்கிற தெம்பு உண்டு எனக்கு”.

அந்தத் தெம்பில் புங்கனூர் வள்ளல் வீட்டில், ஒலையில் எழுதி வைத்த பாட்டை மறுபடியும் வாய்விட்டுப் பாடிக் கொண்டே நடந்தான் அவன்.

'வெண்ணெயும் பார்த்து அன்னை கண்ணையும் தன் மெய்யிற்பட்ட
புண்ணையும் பார்த்திடு நெடுமால் புங்கனூர்க் கிழவன்
பண்ணையும் சேலுகளுந் தடநீள் கயல்பாயு நெடுந்
திண்ணையும் கெண்டைபுரட்டுங் கல்யாணத்திற் சென்றவர்க்கே.”

(பெருந்தொகை 1620)

கெண்டை புரட்டுதலாவது = பசி மயக்கத்தில் வயிற்றில் ஏற்படும் குரக்கு வலிப்பு போன்றதோர் வேதனை.


51. காட்டில் ஒலித்த தமிழ்க் கவி

சோழ வள நாட்டில் திருவாரூரில் இலக்கண விளக்கப் பரம்பரை என்றால் பழைய தலைமுறையில் தமிழறிந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும். வழிமுறை வழிமுறையாகத் தமிழ் வளர்த்த பெரிய குடும்பம் அது.

அந்த மரபில் வைத்தியநாத தேசிகர் என்ற ஒருவர் இலக்கண விளக்கம் என்ற பெயரில் ஐந்திலக்கணத்தையும் விளக்கும் நூல் ஒன்றை எழுதினார். அதனால்தான் அவருக்குப் பின் அந்த வம்சத்துக்கே இலக்கண விளக்கப் பரம்பரை என்ற பெயர் ஏற்பட்டது.