பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தமிழ் இலக்கியக் கதைகள்

வைத்தியநாத தேசிகருடைய மாணவர்களாயிருந்த பலர் பிற்காலத்தில் சிறந்த புலவர்களாக முடிந்தது. அவர்களில் படிக்காசுப் புலவர் என்பவரும் ஒருவர். வைத்திய நாத தேசிகருடைய புதல்வராகிய சதாசிவ நாவலரும் தம் தந்தையிடமே தமிழ்க் கல்வி கற்றார். அதனால் படிக்காசுப் புலவருக்கும் சதாசிவ நாவலருக்கும் பழக்கமும் நட்பும் இருந்தன.

கல்விப் பயிற்சி முடிந்ததும் படிக்காசுப் புலவரும் சதாசிவ நாவலரும் பிரிந்துவிட்டார்கள்.

தம் தந்தை வைத்தியநாத தேசிகர் காலமானபின் சதாசிவ நாவலர் பலருக்குத் தமிழ் கற்பிக்கத் தொடங்கினார். அவருடைய புலமையும் பெயரும் நாளுக்கு நாள் ஓங்கின.

சதாசிவ நாவலருடைய சொற்பொழிவு தேன் மழை பொழிவது போல் கருத்துச் செறிவோடு இனிதாக இருக்கும்.

அந்தக் காலத்தில் முறையாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படிப்பதற்குப் பல வருடங்கள் செலவிடுவார்கள். சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் எப்படிக் குருவுடனேயே வாசம் செய்துகொண்டு அந்தக் கலையைப் படிப்படியாகக் கற்றுக் கொள்வார்களோ, அதே போல் ஒரு பெரும் புலவரை அடுத்துத் தங்கிக் குருகுலவாசம் செய்கிற மாதிரி இருந்து தமிழை முறையாகப் படிப்பார்கள். -

தமிழ் கற்பிக்கும் புலவர்களும், பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் மூலச் செய்யுட்களை மனப்பாடம் செய்யச் சொல்லி, மாணவர்களைக் கண்டிப்பது உண்டு. நன்னூல், காரிகை, நிகண்டு முதலியவைகளை இப்படி முன் கூட்டியே மனப்பாடம் செய்து விடுவது மாணவர்கள் வழக்கம்.

இம்மாதிரி ஆசிரியருடனேயே உடன் தங்கிக் கற்பதில் தமிழ்க் கல்வி மட்டுமின்றி ஒழுக்கம், உலகியல், பண்பு, எல்லாம் தானாகவே ஆசிரியரிடமிருந்து மாணவனுக்குப் பழகிவிடும். தொண்டு செய்யும் பணிவும் வந்துவிடும்.