பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பார்த்தசாரதி

167

அவர்கள் மயங்கி நெகிழ்ந்து போயிருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, “வீட்டில் மிகவும் வறுமையான நிலை, ஏதாவது கொடுத்து உதவுங்கள்” என்று குழைந்து பல்லெல்லாம் தெரியக் காட்டிக் கேட்க வேண்டும். எப்படித் துணிந்து கேட்பது? ‘எப்படியாவது கேட்கத்தான் வேண்டும்’ என்று தரித்திரம் அவரை முன்னால் தள்ளியது.

‘வெட்கத்தைவிட்டு இப்படிக் கேட்கலாமா?” என்று அறிவும் அறிவுக்குரிய நாணமும் அவரைப் பின்னுக்கு இழுத்தன.

இப்படித் தரித்திரம் முன்னுக்கு இழுக்க, நாணம் பின்னுக்கு இழுக்க, என்ன செய்வதென்று தெரியாமல் தெருவிலும் இறங்காமல் வீட்டுக்குள்ளும் திரும்பாமல் வாயிற்படியிலேயே தயங்கி நின்றார் புலவர்.

அவருக்கு எதிரே விராலிமலை மீது குன்றுதோறாடும் குமரனின் கோவில் தெரிந்தது. -

“முருகா! நீ என்னை ஏழையாக மட்டும் படைத்திருக்கலாம். அல்லது அறிவாளியாக மட்டும் படைத்திருக்கலாம். அறிவாளியாகவும் ஏழையாகவும் சேர்த்துப் படைத்து இப்படி ஏன் வதைக்கிறாய்?” என்று முருகனுடைய குன்றத்தை நோக்கி முணுமுணுத்தார் புலவர்.

நெடுநேரம் வாயில்படியில் தயங்கி நின்றபின் புலவர் வீட்டுக்குள் திரும்பவும் இல்லை. வள்ளல் வீட்டுக்குப் பொருளுதவி கேட்கச் செல்லவும் இல்லை. இரண்டையுமே செய்யாமல் நடுவாக மலைக்குப் போகும் வழியில் நடந்தார். வேகமாக மலையேறி முருகன் சந்நிதிக்கு முன்னால் வந்தார். தரித்திரம் பிடித்துத் தள்ளவும்,நாணம் போக விடாமல் தடுக்கவும், ஊசலாடும் தமது மனம் பட்ட வேதனையை முருகனிடமே கூறினார். முருகனிடமே உருகினார். குழந்தைக்குத் துயரமானால் தாயிடம் உருகும். தாய்க்குத் துயரமானால் தெய்வத்தைத் தவிர வேறு யாரிடம் போய் உருகுவது? அறிவையும் இல்லாமையையும் சேர்த்துக் கொடுத்து அந்த முரண்பாடுகளிடையே தன்னை வாட்டிய தெய்வத்தையே இப்படிக் கேட்டார் அவர்: