பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
168
தமிழ் இலக்கியக் கதைகள்
 

"கர் என்றும் சித்தாமணி என்றும் சொல்லி என் கையில் அள்ளித்
தா என்று கேட்கத் தரித்திரம் பின் நின்று தள்ளி எனைப்
போ என்று உரைக்கவும் நாணம் அங்கே என்ன போவதிங்கு
வா என்று இழுக்கவும் வந்தேன் விராலி மலைக் கந்தனே"

'இரண்டில் எதைச் செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. உன்னிடம் வந்துவிட்டேன். எனக்கு ஒரு வழி சொல்' என்று பாட்டிலிருந்து ஒரு தொனி கேட்கவில்லையா உங்களுக்கு? ஊசலாடுகிற மனப் போராட்டத்தை வெளியிடும் தமிழ்க் கவிதைகளில் மிக அழகான கவிதை இது.

56.என்ன கல்நெஞ்சம் இது?

'கம்பர் அம்பிகாபதி பற்றி வழங்கும் தனிப்பாடல்கள் மெய்யோ? பொய்யோ?' என்னும் ஆராய்ச்சி இங்கு வேண்டுவதன்று. ஆராய்ச்சிக்கும் கவிச் சுவைக்கும் வெகுதூரம். அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துக் கொண்டு ஆராயத் தொடங்கி விட்டால் யந்திர உணர்ச்சிதான் வளரும், கவியுணர்ச்சி, அனுபவிக்கும் முனைப்பு இரண்டும் செத்துப் போய்விடும். விஞ்ஞானியின் மனநிலையோடு கவிதையைப் படிப்பதும், கவியின் மனநிலையோடு விஞ்ஞானத்தில் ஈடுபடுவதும் முடியாத காரியங்கள்.

சிந்தனைக்கு விருந்தளிக்கும் அழகிய பாடல் ஒன்று கம்பர் அம்பிகாபதி கதைகளிடையே சிக்கிக் கிடக்கிறது. சிந்திக்கச் சிந்திக்க அழகும் நயமும் தருகிற கவிதை அது. கம்பர் தமக்குத் தாமே பாடிக் கொண்டு கண் கலங்கிய முறையில் அப்பாடல் அமைந்திருக்கிறது. அந்தப் பாடலில் ஒர் இதயத்தின் குமுறல் உள்ளமுருக்கும் விதத்திலே தொனிக்கிறது. கவிநாயகராகிய கம்பர்பெருமான் தமக்குள் அழுது தவிக்கின்ற சோகத்தை அந்தப் பாடலிலிருந்து நாம் அறிய முடிகிறது.