பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தமிழ் இலக்கியக் கதைகள்

விட்டதே’ என்பதை எண்ணும் போதுதான் கம்பர் தாம் மாபெரும் கவிஞர் என்ற நிலையிலிருந்து கீழிறங்கிச் சாதாரண மனிதனுக்குரிய தாபங்களை அடைவது தெரிகிறது.

மகன் இறந்த போதும் கலங்கித் தவிக்காத தமது நெஞ்சுரத்தைக் கம்பர் பாராட்டிக் கொள்ளவில்லை. ‘மகன் இறந்த அந்தக் கணத்திலேயே தம் உயிர் போகாமல் இன்னும் உடலில் தங்கி இருந்து தொலைக்கிறதே!’ என்றுதான் அவர் வருந்துகிறார். தாம் சாமான்ய மனிதனாக இல்லாத தன் குறை அவரை வாட்டுகிறது. கவியாக இருந்ததற்காக அவர் அப்போது வருத்தப்பட்டார். ஆனால் அந்த வருத்தமும் ஒரு கவிதையாகவே வெளிவருகிறது.

பரப்போத ஞாலம் ஒருதம்பி யாளப் பனிமதியம்
துரப்போன் ஒருதம்பி பின்வரத் தானும் துணைவியுடன்
வரப்போன மைந்தற்குத் தாதை பொறாது உயிர்மாய்ந்தனன் நெஞ்சு
உரப்போ எனக்கு இங்கு இனியார் உவமை உரைப்பதற்கே!”

தனிப்பாடல்

ஒரு மகாகவி சாதாரண மனிதனைப்போல் தன் சொந்த மனத்தவிப்பை வெளியிடுகிற அழகு பாடலில் எவ்வளவு அற்புதமாகப் பதிந்திருக்கிறது, பார்த்தீர்களா?

57. பண்பாடு தெரிந்தவர்

புறக்கருவிகளின் வசதிகளும் வாழ்க்கையில் வேகமும் வளர வளர மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணம் சமூக வாழ்வில் குறைந்து கொண்டே வருகிறது. பிறரைக் கவனிக்காமல் பிறருடைய இன்ப துன்ப உணர்ச்சிகளைப் பொருட்படுத்த வாழ்வதே ஒருவகை நாகரிகம் என்று நம்முடைய நகரங்கள் கற்றுக் கொடுத்துவிட்டன.