பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

175

புலவர்கள் தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் எத்தனை பெரிய நிலையில் உள்ளவர்களையும் சந்திக்கக் கிளம்பி விடுவது இயல்பாக இருந்தது. ஆனால் அன்று ஆதிசரவணப் பெருமாள் கவிராயர் வீரகேரள மன்னனைச் சந்திக்கப்போன வேளை சரியாக இல்லை. அரசன் ஏதோ கோபமாக இருந்தான். என்னதான் கோபமாக இருந்தாலும் வந்தவர்களை முகம் மலர வரவேற்பதுதான் பண்புக்கு அழகு. ஆனால் பண்பைப் பற்றி அவன் அதிகமாகக் கவலைப்படவில்லை.

“யாரையா நீர்? உமக்கு எந்த ஊர்? இங்கு எதற்காக வந்தீர்? என்ன வேணுமென்று சொல்லித் தொலையும்” என்று துரத்தியடிக்கிற வேகத்தோடு விசாரித்தான் வீரகேரள மன்னன். புலவருக்கு முகம் சுருங்கிச் சிறுத்தது. மனத்தில் ஆத்திரம் எழுந்தது. ‘இரு! இரு! உன்னைச் சரியானபடி மடக்கித் தலைகுனியப் பண்ணுகிறேன்’ என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டு அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.

“பதில் செல்லுமேன் ஐயா! வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது? உமக்கு எந்த ஊர்?”

“என் ஊரையா கேட்கிறீர்கள்? சொன்னால் வருத்தப் படக்கூடாது. உள்ளபடியே சொல்கிறேன். முன்பொரு நாள் நீங்கள் சேதுபதியின் தரிசனத்துக்காக ஏழு நாட்கள் அநாதைபோல் வாயிலில் வந்து காத்துக் கிடந்தீர்களே, அந்த இராமநாதபுரத்து வித்துவான் யான்” என்று கோபத்தோடு சொல்லிக் காட்டுவது போல் கடுமையான கருத்து படத் தொடங்கிய புலவர் பாடலின் பிற்பகுதியில் சிறிது புகழ்ச்சியையும் சேர்த்துக் கொண்டு விட்டார். முன்னோர் புகழை அவன்மேற் கூறித் தப்புகிறார்.

“இலைநாட்டு வேல்கரத்துச் சேதுபதி
தரிசனத்துக்கு ஏழுநாள் ஒர்
மலைநாட்டுராசன் வந்து காத்திருந்த
வாசல் வித்துவான் யான்கண்டாய்