பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
177
 

வேதநாயகம் பிள்ளை கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்குத் திருவாவடுதுறை மடத்திலே நெருங்கிய பழக்கம் இருந்தது. உரிமைகளும் வசதிகளும் படிப்பறிவும் பெருகியுள்ள இந்த நாளில் தான், சாதி சமயப் பாகுபாடுகளும் குழப்பங்களும் பெருகியுள்ளன. அந்தக் காலத்தில் ஒற்றுமை இருந்ததென்பதற்குக் கிறிஸ்தவரான வேதநாயகம் பிள்ளையும், சைவ மடாதிபதியான சுப்பிரமணிய தேசிகரும் பழகிக் கொண்ட முறையே சான்று. ஒரு சமயம் மாயூரம் பகுதிகளில் பேதி நோய் ஏற்பட்டுப் பல பேர்கள் இறந்து போனார்கள். அந்தச் சமயத்தில் சுப்பிரமணிய தேசிகருடைய உதவியைக் கொண்டு வேதநாயகம் பிள்ளை பேதி நோய் பரவியிருந்த ஊர்களுக்கெல்லாம் தாம் ஒருவராக அலைந்து திரிந்து நோய் கண்ட மக்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்தார். வேதநாயகம் பிள்ளையிடம் ஒர் அருமையான இரட்டை மாட்டு வில் வண்டி இருந்தது. திருவாவடுதுறைக்கோ, மற்ற இடங்களுக்கோ போக வேண்டுமென்றால் வண்டியைப் பூட்டிக் கொண்டு கிளம்பி விடுவார் வேதநாயகம் பிள்ளை. சுப்பிரமணிய தேசிகரைச் சந்தித்து அளவளாவி விட்டு வருவதற்காக ஒரு தடவை வேதநாயகம் பிள்ளை திருவாவடுதுறைக்குப் போயிருந்தார். சுப்பிரமணிய தேசிகர் தமிழ் இலக்கிய வல்லுநர். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது எப்படிப்பட்ட கடுமை உள்ளமுடையவர்களானாலும் நெகிழ்ந்து போய் அவர் பேச்சில் மனத்தைப் பறி கொடுத்து விடுவார்கள். அவ்வளவு சாமர்த்தியமாகவும் நயமாகவும் பேசுகிறவர் அவர்.

காலையில் ஊரிலிருந்து புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்த வேதநாயகம் பிள்ளை வெகுநேரம் சுப்பிரமணிய தேசிகரிடம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு இராத்திரியே திரும்பி விட்டார். அவர்தான் திரும்பினாரே ஒழிய, அவருடைய மனம் சுப்பிரமணிய தேசிக்ரிடமே தங்கிவிட்டது. நினைவு களெல்லாம் அவரைப் பார்த்துப் பேசிய இனிய நாழிகை களிலேயே இருந்தன. ஊருக்குத் திரும்பிய பின்னும் சுப்பிரமணிய தேசிகரைச் சந்தித்துப் பேசியதை எண்ணியே சதா ஏங்கிக்

உபூ-12