பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தமிழ் இலக்கியக் கதைகள்

எவ்வளவு அருமையான மனோபாவப் பிடிப்பை விளக்குகிறது பாட்டு, கதையின் துரிதம் முழுமையும் பாட்டின் கருத்து வேகத்தில் அமைந்தவை.

5. கட்டுச்சோறு பறிபோனது

இன்பத்தையோ துன்பத்தையோ, இரண்டுங் கலந்த நிலைகளையோ அனுபவிப்பதும், அனுபவித்து மறந்து விடுவதும் எளிதுதான். ஆனால், அந்த அனுபவத்தைச் சுவைகுன்றாமல் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லது தனிப்பட்ட ஒரு கலை. தனிப்பாடல் திரட்டிலுள்ள கவிதைகளில் பெரும்பாலானவை இந்த அனுபவ வெளியீட்டுக் கலைக்கு ஒரு முத்திரை வைத்தாற் போல விளங்குகின்றன. வாழ்க்கையின் சிறியவும் பெரியவும் ஆகிய இன்ப துன்ப அனுபவங்களை, அனுபவித்தவரே வெளியிடும் சிறப்பும் இவைகட்கு உண்டு. சொந்த அனுபவத்திலிருந்து பிறக்கும் எதிலுமே மனோபாவக் கலப்பு இருக்கும்.

வீரராகவ முதலியார் குருடர். ஆனால், ஒளி படைத்த அறிவுக் கண்கள் பெற்ற தமிழ்ப் புலவர். ஒருமுறை இவர் தம் நண்பர் ஒருவரின் துணைகொண்டு பக்கத்து ஊருக்குக் கால்நடையாகச் சென்று கொண்டிருந்தார். புலவருக்கும் தமக்கும் இடைவழியிலே பசி தீர்த்துக்கொள்ள உதவுமென்று கருதி, வழிகாட்டி அழைத்துச் செல்லும் நண்பர் கட்டுச்சோற்று மூட்டையொன்று கொண்டு வந்திருந்தார். வழிநடைத் துன்பம் தெரியாதிருக்க ஒருவருக்கொருவர் வேடிக்கையாகப் பேசிக் கொண்டே நடந்தனர். பாதி வழி நடந்ததும் இருவருக்கும் வயிற்றில் பசி எடுத்தது. பொழுதும் நடுப்பகல் ஆகியிருந்தது. வைகறையில் பயணத்தை ஆரம்பித்த அவர்கள் புறப்படுவதற்கு முன் அவசர அவசரமாக இரண்டு வாய் சோற்றை அள்ளிப் போட்டுக்கொண்டு புறப்பட்டிருந்தார்கள். நடந்துவந்த களைப்பும், உச்சிப் பொழுதின் வெய்யிற் கடுமையுமாக வயிற்றில் பசியைக்கிளறிவிட்டிருக்க வேண்டும். எதிரில் வழியோரமாக ஒரு