பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தமிழ் இலக்கியக் கதைகள்

கொண்டிருந்த வேதநாயகம் பிள்ளை அந்த ஏக்கம் பொறுக்க முடியாமல் தவித்தார். தவிப்பைத் தாங்கிக் கொள்ள இயலாமல் சுப்பிரமணிய தேசிகருக்கே ஒரு கடிதம் எழுதிவிட்டார் அவர். கடிதத்தில் ஒரே ஒரு பாட்டுத்தான் எழுதியிருந்தார். வேறு ஒன்றும் எழுதவில்லை. அந்த ஒரு பாட்டுத்தான் கடிதம், கடிதம்தான் அந்த ஒரு பாட்டு. ஆனால் தம்முடைய மனத்தைக் கவர்ந்த நல்ல மனிதருக்கு எப்படி நாம் ஒரு கடிதம் எழுத வேண்டுமென்பதற்குச் சரியான முன் மாதிரியாகத் திகழ்கிறது அந்தப் பாட்டு. வேத நாயகம் பிள்ளையின் உள்ளத்து உருக்கமெல்லாம் ஒன்று சேர்ந்து சங்கமமாகி அந்தப் பாட்டில் காட்சியளிப்பதைக் காணலாம்.

சூர்வந்து வணங்கும் மேன்மைச் சுப்பிரமணிய தேவே
நேர்வந்து நின்னைக்கண்டு நேற்றுராத் திரியே மீண்டேன்
ஊர்வந்து சேர்ந்தேன் என்றன் உளம்வந்து சேரக்காணேன்
ஆர்வந்து சொலினுங்கேளேன் அதனை இங்கனுப்பு வாயே!”

‘ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டேன். ஆனால் என்னுடைய உள்ளம் மட்டும் வராமல் அங்கேயே உங்களிடம் தங்கி விட்டது. அதை எனக்குத் திருப்பி அனுப்பி வையுங்கள்’ என்று வேதநாயகம்பிள்ளை எழுதியிருப்பதில் தான் எவ்வளவு குழைவு வேதநாயகம் பிள்ளையில் மனோபாவம் பாட்டில் அழகாகப் பதிந்துள்ளது. இந்தப் பாட்டைப் படிப்பவர்கள் பறி கொடுத்த மனம் திரும்பக் கேட்டால் கிடைக்காது.

60. பேர்தான் அப்படி!

பழங் காலத்தில் தமிழ்நாடு தொண்டைமண்டலம், கொங்கு மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் முதலிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இம்மண்டலங்களில் வாழ்ந்து மறைந்த அரசர்கள், புலவர் பெருமக்கள் ஆகியோர் பற்றி அறிந்து கொள்ள வசதியான நூல்களைச் ‘சதகங்கள்’ என்ற பெயரில் பாக்களாகவே எழுதி வைத்திருக்கிறார்கள்.