பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

179

தொண்டைமண்டலத்தில் வாழ்ந்த பெரியோர்களின் ஊர், பேர், சிறப்புக்களைத் தொண்டை மண்டல சதகம் கூறும். அதே போல் ஏனைய சதகங்களும் தத்தம் மண்டலங்களுக்கு ஒரு சுருக்கமான வரலாறாக அமையும். இந்தச் சதக நூல்களைச் செய்யத் துண்டியும் தொகுப்பித்தும் உதவியவர்கள் தமிழ் வரலாற்றுக்குப் பெருந்தொண்டு புரிந்திருக்கிறார்கள் என்றே கூறவேண்டும்.

தொண்டை மண்டல சதகத்தைச் செய்வித்தவர் மாவை நகரைச் சேர்ந்த கறுப்பன் என்னும் வள்ளலாவார். இந்த வள்ளலின் தந்தை கத்துரி என்பவர் சிற்றரசர் போன்று பெரு வாழ்வு வாழ்ந்தவர். தொண்டை நாடு முழுவதும் பசிப்பிணி ஏற்படாமல் கொடை புரிந்த பெருமையுடையவர். இத்தகைய நல்லோர்க்குப் புதல்வராகப் பிறந்த கறுப்பனும் பேரறச் செல்வராய்க் கொடுத்துக் கொடுத்துப் புகழ் சேர்த்துக் கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் படிக்காசுப் புலவர் என்றொரு கவிஞர் இருந்தார். தாம் பாடுகிற கவிதைகளுக்குப் படிக் காசு பெறுகிற வழக்கமுடையவர். ஆதலால் அவருக்கு அப்பெயர் ஏற்பட்டிருந்தது.நீண்ட நாட்களாகக் கறுப்பனை நேரில் கானும் வாய்ப்பில்லாமலே அவன் புகழையும் கொடுக்கும் தன்மையையும் மட்டுமே கேள்விப்பட்டுக் கொண்டிருந்தார் படிக் காசுப் புலவர். மெய்யாகவே கறுப்பு நிறத்தைக் கொண்டிருப்பதால் தான் கறுப்பன் என்று அந்த வள்ளலுக்குப் பெயர் வந்திருக்கலாமோ என்பது அவருடைய அனுமானம்.

தமிழ் மொழியில் கறுப்பு என்ற வார்த்தைக்குச் சில பொருள்கள் உண்டு. கறுப்பு நிறத்தையும் பஞ்சத்தையும் கோபத்தையும் உணர்த்துகிற வார்த்தை அது தொண்டை நாட்டு எல்லைக்குள் பசி, பஞ்சம் என்கிற தொல்லை இருந்ததே இல்லை. எனவே அதன் காரணமாகக் கறுப்பன் என்று பெயர் ஏற்பட்டிருக்க முடியாது.