பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
17
 

நீர்ப்பொய்கை, அதன் அக்கரையில் ஒரு பெரிய வாழைத் தோட்டம். அதைக் காவல் காக்கும் தோட்டக்காரனின் சிறு குடிசை. இப்படியாகத் தோன்றிய ஓர் இடத்திற்கு வந்தவுடன் நண்பர் கட்டுச்சோற்று மூட்டையை அவிழ்த்து அந்தப் பொய்கைக் கரையிலேயே உணவை முடித்துக் கொள்ளக் கருதினார். புலவரிடம் கூறியபோது அவரும் அப்படிச் செய்வதே நல்லதென்றார். இருவரும் கைகால்களைக் கழுவித் தூய்மை செய்து கொண்டு பொய்கைக் கரையில் உட்கார்ந்தனர். கீழே ஒரே கரம்பை மண்ணாக இருந்ததால் ஒரு வாழை இலை கொண்டுவரப் புறப்பட்டார் நண்பர்.

புறப்படும் போது புலவர் குருடராகையால் பக்கத்தில் பொய்கை என்பதைக் கூறி எச்சரித்துச் சோற்று மூட்டையை அவர் பக்கத்தில் நகர்த்தி வைத்துவிட்டுப்போனார். தோட்டக்காரனின் குடிசையை நெருங்கியதும் அவரை முதன் முதலில் வரவேற்றது காவலுக்காக அவன் வளர்த்து வந்த சொறி நாய்தான். பார்க்க நோஞ்சலாகச் சொறிபிடித்துத் தோன்றிய அந்த நாய் அவரைக் கண்டதும் உயிரைப் பிடித்துக்கொண்டு கத்துவது போல் குரைத்துக் கொண்டே பொய்கை பக்கமாக ஓடிவிட்டது. அவர் தோட்டக்காரனைச் சந்தித்து ஓர் இலை வேண்டுமென்று கேட்டார். அவன் நன்றாக வளர்ந்த பெரிய இலை ஒன்றைக் கிள்ளிக் கொடுத்தான். நண்பர் பெற்றுக்கொண்டு திரும்பினார். வாழைத் தோட்டத்திலிருந்து பொய்கைக் கரைக்கு வரும் வழியில் பாதி தூரம் நடந்திருப்பார். எதிரே அந்தச் சொறி நாய் இரைக்க இரைக்க ஓடி வந்து கொண்டிருந்தது. அது மட்டும் வந்திருந்தால் அவர் கவலைப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதன் வாயில் கவ்விக்கொண்டு வந்து கட்டுச்சோற்று மூட்டையைக் கண்டதும்தான் அவருக்கு அடிவயிற்றில் ‘பகீரென்றது. இலையும் கையுமாக நாயை விரட்டினார். அந்த அப்பாவி நோஞ்சல் தாய் பொய்கைக்கும் தோட்டத்திற்கும் நடுவில் இருந்த சேறும் சகதியுமான வாய்க்காலைத் தாண்டும்போது மூட்டையை அதற்குள் தவற விட்டுவிட்டு ஓடிப்போயிற்று. மூட்டை அவிழ்ந்து சோறு சேற்றோடு கலந்துவிட்டது, தலைவிதியே என்று வாழை