பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
188
தமிழ் இலக்கியக் கதைகள்
 

தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் கோபி செட்டி பாளையத்தின் அருகில் பாரியூர் என்று ஒர் ஊர் இருக்கிறது.அந்த ஊரில் செட்டிப் பிள்ளையப்பன் என்று ஒரு செல்வர் இருந்தார். அவர் கணவாள குலத்தைச் சேர்ந்தவர். தெய்வ பக்தி மிக்கவர். தம்மூருக்கு அருகில் தேவி பாகத்தனாகக் கோயில் கொண்டிருக்கும் அமரவிடங்கப் பெருமானுக்குத் திருப்பணிகள் பல புரிந்தவர்.

அவர் அறம் செய்வதை ஒரு விரதமாக வைத்துக் கொண்டிருந்தார். கவிபாடி வருகிறவர்களையும் ஏழ்மையினால் வாடி வருகிறவர்களையும் வரவேற்று இல்லையென்று சொல்லாமல் முடிந்ததையெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

கேட்கிறவர்களிடம் 'இல்லை’ என்று கூறுகிற நிலை நேர்ந்தால் உலகில் உயிரோடு வாழவே கூடாது என்பது போலக் கொடை வெறி பிடித்திருந்தது அவருக்கு எத்தனை நாளைக்கு முடியும் அப்படி? கடைசியில் வளமாக இருந்த அவருடைய செல்வ நிலையும் சற்று வறண்டது. நோயுடன் வருகிறவர்களுக்கெல்லாம் பச்சிலையும் வேரும் பட்டையும் கொடுத்துத் தான் தழைக்கமுடியாமல் பட்டுப் போகும் மருந்து மரம்போல் குன்றிப் போனார் செட்டிப்பிள்ளையப்பன். வீட்டுப் பாட்டுக்கே போதாத அளவு அந்தக் குடும்பத்தில் ஏழைமை வந்து கவிந்து கொண்டது.அப்படிப்பட்ட வறுமை நிலையில் ஒரு நாள் காலை அவருடைய வீட்டைத் தேடிக் கொண்டு சில புலவர்கள் வந்தார்கள். அவர்கள் எல்லாரும் முன்பு அவர் வசதியாக இருந்த காலத்தில் அடிக்கடி உதவிகள் பெற்றுக் கொண்டு போனவர்கள். இப்போதும் அப்படி ஏதோ ஒர் உதவி பெறவே வந்திருந்தனர். அவரே இப்போது ஏழைமையில் வாடுகிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. பாவம்!

செட்டிப் பிள்ளையப்பன் பார்த்தார். புலவர்களுக்கு 'இல்லை' என்று சொல்ல அவருக்குத் துணிவில்லை; கொடுப்பதற்கும் ஒன்றும் இல்லை. அன்றுவரை 'இல்லை' என்ற சொல்லைச் சொல்லாமல் பழகிக் கொண்டிருந்த அந்த நா அன்றும் அதைச் சொல்ல எழவில்லை.