பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தமிழ் இலக்கியக் கதைகள்

பரவசமாகி உடம்பையே மறந்து உடம்பே ஒளிமயமாக மாறிப் பாடிக் கொண்டேயிருந்தார். அவர் அப்போது இந்த உலகத்திலேயே இல்லை. கைலாச சிகரத்தில் முக்கண்னிறைவனுக்கு அருகில் வீற்றிருக்கும் உமாதேவியின் காலடியில் உட்கார்ந்து சிறு குழந்தையாய் மாறி மழலைக் குரலில் கதறிக் கொண்டிருப்பது போல் அவர் மனத்தில் ஒரு பிரமை ஏற்பட்டது. கண்களை முடியவாறே நின்று கொண்டு தியான பரவச நிலையில் ஒவ்வொரு பாடலாகப் பாடிக் கொண்டிருந்த அவருக்கு மானசீகமாக ஒரு தோற்றம் ஏற்பட்டது. உமாதேவி தம்முடைய பாடலுக்கு வியந்து தன் இரு செவிகளிலும் அணிந்திருக்கும் வைரத் தோடுகளைக் கழற்றிப்பரிசாக எறிவது போல் தோன்றியது அவருக்கு. உமாதேவி கழற்றி எறிந்த அந்த வைரத் தோடுகள் அவர்மேல் வந்து விழுகின்றன. ‘தாயே! இந்த ஏழையின் பிதற்றலுக்கு நீ அளிக்கும் பரிசா இவை? என்று கேட்கத் துடிக்கிறது அவர் நாக்கு. எல்லாம் மானசீக மாகத்தான்; உண்மையாக இல்லை. அவர்தான் தியானத்தால் மூடிய கண்களைத் திறக்காமல் பாடிக் கொண்டேயிருந்தாரே பாடிக் கொண்டிருக்கும் போதே இது கனவு போல் மனத்தில் தோன்றியது. அப்படி ஒரு தோற்றம் தான் வைரத்தோடுகள் உமாதேவியின் கைகளிலிருந்து வீசி எறியப்பட்டு வந்து விழுவது போல் ஒவ்வொரு கணமும் ஒரு மானசீக உணர்வு அவருக்கு ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. அந்த உணர்வைச் சுமந்து கொண்டே அந்தாதியை ஒவ்வொன்றாகப் பாடியவாறு நின்றார் அவர்.

விழிக்கே அருளுண்டு அபிராம
வல்லிக்கு வேதஞ் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்
டெமக்கல் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்களே
செய்து பாழ்நரகக்
குழிக்கே யழுந்தும் கயவர்தம்மோ
டென்ன கூட்டினியே.”

(அபிராமி அந்தாதி)