பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா.பார்த்தசாரதி
199
 

பார்த்திருக்க வேண்டும். அது நெருப்புக்கு இரையாகிக் கரிந்து வலுவிழந்த பின்னும் சரியாமல் உருவிழக்காது நிற்கும் காட்சி அவன் சிந்தனையைத் தூண்டியிருக்க வேண்டும் நினைவுகளும் தன்னம்பிக்கையும் அழிந்து, எரிந்து, மனமும் உடம்பும் வெறுங் கூடாகி என்ன பலத்தினால் நிற்கிறோமென்று தெரியாத ஏதோ ஒரு பலத்தினால் நிற்கும் அப்பாவி மனிதனுக்கு இந்த வைக்கோற் புரியின் எரிந்த நிலையை உவமை சொல்ல வேண்டும் என்று அப்போது அந்தத் தமிழ்ப் புலவன் நினைத்திருப்பான். ஆனால் தன் வாழ்விலேயே அப்படி ஒரு நிலை வருமென்று அவன் அன்று எதிர்பார்த்திருக்க முடியாது.

உலகத்து வாழ்க்கையில் நினைத்தவர்க்கு நினைத்தபடியா எல்லாம் வருகிறது? சுகத்துக்கு ஆசைப்பட்டால் துக்கம் வருகிறது. 'வேண்டாம்' என்கிறவனுக்கு எல்லாம் கிடைக்கிறது. வேண்டுமென்று தவிப்பவனுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தால் உலகத்துக்கு உள்ளே இருக்கிற வேடிக்கைகளையெல்லாம் விட உலகமே ஒரு பெரிய வேடிக்கைதான்.

‘எரிந்த வைக்கோற்புரி' உவமையை எதற்காவது கூறலா மென்று நினைத்து வைத்திருந்த புலவன் அதைத் தன் வாழ்வுக்கே கூறிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த ஆண்டின் கோடையில் அந்தப் புலவனுடைய ஊரில் கொடுமையாகத் தோன்றிப் பரவிய அம்மை நோயாலும், அதைப் போன்ற வேறு சில கொள்ளை நோய்களாலும் அந்தப் புலவனுடைய தாய்,தந்தை இருவரும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். ஊரில் உள்ள அவனுடைய உறவினர்களிலும் பலர் இறந்து போனார்கள். 'மனிதர்களை மரணம் கொள்ளை அடித்தது. மனிதர்களைக் கொள்ளையடிப்பது போல் வாரிக் கொண்டு போவதனால் தான் அம்மைக்குக் கொள்ளை நோய் என்று பெயர் ஏற்பட்டது போலும் கொள்ளை நோயில் அவ்வூரும் சீரழிந்தது.

ஊரில், கோவிலிலுள்ள சிலைகளைத் தவிர மனிதர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை அந்த நோய். நல்வினை வசமாகப்