பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. கம்பஞ் சோற்று விருந்து

"சோழநாடு பாழ் போகிறதா என்ன? நினைத்த இடங்களில் எல்லாம் பூம்பொய்கையும் ஆற்றுக் கால்களுமாக இருக்க, நீர்வேட்கையைத் தணித்துக் கொள்ள இயற்கை வசதி சிறிதும் இல்லையே! மற்றவர்களின் உதவியை நாடித்தான் ஆகவேண்டும் போலிருக்கின்றன!” கம்பருக்குத் தண்ணிர் தாகம் ஒரேயடியாக நாவறண்டு போகச் செய்கிறது. 'சோழநாட்டிலே எல்லா வளமும் இருந்தது. கூற்றிலும் பாவலர் கொடியவர் என்றான் சிந்தனையுணர்ச்சி அற்ற அந்தச் சோழ மன்னன். உடலை வருத்தித் துன்புறுத்தினாலும் பொறுத்துக்கொண்டு இருந்துவிடலாம். உண்மைக்கு நேர்மாறான கருத்தைக்கொண்டு உள்ளத்தை வருத்துவதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது, “நீ முனிந்தால் எங்கட்கு இல்லையோ இடம்?" என்று கூறி அவன் கருத்தை எதிர்த்துவிட்டுப் புறப்பட்டேன். இங்கோ கொங்கு நாட்டில் வந்து பார்த்தால் இப்படி இருக்கிறது! எங்கே பார்த்தாலும் கல்லும் பாறையுமாகத் தெரிகின்ற கல்லாங்காடுகள். காணப் பசுமை மிகுந்து தோன்றும் சோழ நாடெங்கே? கொங்கு நாடெங்கே? சிந்தித்துக்கொண்டே வந்த கம்பர் தாம் ஒரு சிற்றூரை நெருங்குவதை உணர்ந்தார்.தண்ணிர்வேட்கை அவரை நடையில் வேகங்கொள்ளச் செய்தது. -

ஊருக்குள் இரண்டோர் வீடுகளில் மனையேறித் தண்ணிர் கேட்கும் நிலைக்காகக்கூட அவர் நாணவில்லை. ஆனால் அப்படிக் கேட்டும் பாராமுகமாக நடந்துகொண்ட அம் மனைக்குரியவர்களின் பாண்பாட்டுக்காக நாணினார். இதை விடத் தண்ணீர் குடியாமலே மேற்சென்று விடுவது நல்லது என்று வழிநடையைத் தொடர்ந்த அவரை ஓர் இனிய குரல் திரும்ப வைத்தது. "ஐயா, எங்கள் வீட்டிற்கு வரலாமே" கம்பர் திரும்பிப் பார்த்தார். இருபது இருபத்திரண்டு வயது மதிக்கலாம். ஒரு வேளாளப் பெண் தயங்கித் தயங்கி நின்றுகொண்டே அவரை அழைத்தாள். அவள் இடுப்பில் தண்ணீர்க்குடம் இருந்தது. “ஏன் அம்மணி இங்கேயே சிறிது தண்ணிர் வார்த்தால் உண்டு