பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தமிழ் இலக்கியக் கதைகள்

செல்வேன்” என்றார் கம்பர். “இல்லை, நீங்கள் மிகவும் களைப்படைந்தவராகத் தென்படுகிறீர்கள். எங்கள் மனைக்கு வந்து சிறிது உணவருந்தி விட்டுப் போகவேண்டும்.” அவள் குரலில் கெஞ்சுகின்ற பாவம் இருந்தது. மறுத்துரைக்க முடியாமல் கம்பர் பின்தொடர்ந்தார். வீட்டு வாயிலில் அவள் கணவன் என்று மதிப்பிடத் தக்க ஆடவன் ஒருவன் அமர்ந்து கொண்டிருந்தான். குறிப்புணரும் திறம்மிக்கவனாக இருக்க வேண்டும் அவன். தண்ணீர்க் குடத்தோடு மனைவி உள்ளே சென்றதும் ஒரு நொடியில் உள்ளே சென்று யாவற்றையும் அறிந்துகொண்டு வாசலுக்கு வந்து கம்பரை வரவேற்று அமரச் செய்தான். கம்பர் தண்ணீர் வேண்டும் என்றார். அவன், “உணவருந்த வேண்டும்” என்றான்.” ஆகட்டும், நான் மறுக்கவில்லை. முதலில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறவும், அவன் நன்றாக விளக்கிய ஒரு செம்பு நிறையக் குளிர்ந்த நீர் கொண்டு வந்து கொடுத்தான். தாகந் தீரப் பருகினார் கம்பர். பசுமைமிக்க சோழநாட்டில் அந்நாடுமுழுமையும் ஆளும் சோழ வேந்தனுக்கு இல்லாத மனப் பசுமை, கல்லும் மண்ணுமாகக் காட்சியளிக்கும் இந்தப் பசுமையற்ற கொங்கு நாட்டில் ஒர் ஏழை வேளாளன் மனைவிக்கும் வேளாளனுக்கும் இருந்ததை அவர் உணர்ந்தார். அவன் பெயர் செல்லன் எனவும் தம்மை அழைத்து வந்தவள் அவன் மனைவி எனவும் தெரிந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் உள்ளேயிருந்த கதவிடுக்கில் அந்த வேளாளப்பெண்ணின் தலைதெரிந்தது.அவனுக்கு ஏதோ சைகை செய்தாள். அவன் கம்பரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். உள்ளே இரண்டு இலைகளில் ‘கமகம’ வென்ற மணத்துடன் ஆவி பறக்கும் கம்பஞ் சோறு படைக்கப் பட்டிருந்தது. கம்பருக்கு நல்ல பசி.வயிறார அந்தக் கம்பஞ்சோற்று விருந்தை நுகர்ந்தார். செல்லன் மனைவியின் அன்புக் கரங்கள் விருப்போடு படைக்கும்போது மனத்தயக்கம் ஏற்படக் காரணமே இல்லையே! கைகழுவி முடிந்ததும் கம்பர் அந்தக் கம்பஞ்சோற்று விருந்தையும் செல்லன் மனைவியையும் பாராட்டிப் பாடினார். அதில் நன்றி உணர்வு தொனித்தது.