பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

35

துவாரங்களுடன் அமைந்திருக்கும் நுண்ணிய தேன் அடையைச் சில சிறிய ஈக்கள் அல்லவா செய்துவிடுகின்றன? அப்படிச் செய்ய முடிவதனால் மட்டும் தூக்கணாங்குருவியும் கரையானும் தேனீயும் மனிதர்களைக் காட்டிலும் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று தலை நிமிர்ந்து சொல்லிக் கொண்டுவிட முடிகின்றதா, என்ன? இதே போலத்தான் அவரவருக்கென்று அமையும் திறமையும்!

வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.”

வான் குருவி = துக்கணாங் குருவி, சிலம்பி = சிலந்தி, கரையான் = கரையானின் புற்று.

ஒளவையார் பாடி முடித்தார். சோழன் தலை குனிந்தான். தன் கருத்தில் இருந்த பிழையை எடுத்துக் காட்டியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி செலுத்தி வணங்கினான். செயலையும் செயல் வன்மையையும் பொறுத்து எழுகின்ற வன்மை, மென்மை உணர்ச்சிகளைப் பற்றிய அருமையான சித்தாந்தம் ஒன்றை யாவருக்கும் விளக்கி விடுகின்றது இந்த வெண்பா.

13. உலகம்பெறும் உணவு

ந்த விருந்தினர் பசியால் வெந்தாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள் புல்வேளூர்ப் ‘பெருமக்கள்’. தாங்கள் உண்டுதங்கள் வயிறுண்டு என்ற ‘கட்டுப்பாடான’ கொள்கைக்காரர்கள் புல்வேளூரார். பனந் தோட்டத்திற்கு நடுவில் ஒரு பலா மரம் போல் ‘பூதன்’ ஒருவன்தான் அந்த ஊரிலேயே மற்றவர்களைப் பற்றி நினைப்பவனாக இருந்தான். பசித்து வந்த விருந்தினரைக் கண்டால் பண்போடு உபசரிப்பான்; ‘யாருக்கு வந்த விருந்தோ?’ என்று எவரையும் அலட்சியம் செய்வதே இல்லை. புல்வேளூரில்