பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38
தமிழ் இலக்கியக் கதைகள்
 

பெற்றிருந்தாள். குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டும் போதவில்லை. அக்கம் பக்கத்து வீட்டில் வாங்கியளிக்க உதவுபவர்களும் இல்லை. பசுவின் பால் கிடைக்காது என்று இல்லை. அதைச் சமயமறிந்து வாங்கி அளிக்க வீட்டில் சிற்றாட்கள் ஒருவ்ரும் கிடையாது. அந்தக் குறைதான். "குறை தீரக் குழந்தைக்கு வேளா வேளைக்குப் பால் கிடைக்கச் செய்ய என்ன வழி?” என்று யோசித்தார் படிக்காசுத் தம்பிரான். யோசனை ஒரு முடிவுக்கு வந்தது. ஏட்டை எடுத்தார். வல்லை மாநகர்க் காளத்தியப்பருக்கு ஒரு சீட்டுக் கவி எழுதினார். காரியம் வெற்றியே என்ற நம்பிக்கையுடன் ஒராள் வசம் ஏட்டைக் கொடுத்துக் காளத்தியிடம் அனுப்பினார்.

பெற்றாள் ஒரு பிள்ளை என்மனை
   யாட்டி அப்பிள்ளைக்குப் பால்
பற்றாது கஞ்சிகுடிக்கும்
   தரமல்ல பால் இரக்கச்
சிற்றாளும் இல்லை இவ்வெல்லா
   வருத்தமும் தீர ஒரு
கற்றா தரவல்லையா? வல்லைமா
   நகர்க் காளத்தியே!”

தரம் = பருவம், இரக்க = கேட்டு வாங்கிவர, சிற்றாள்= வேலையாள், கற்றா = கன்றுடன் கூடிய ஈன்ற பசு.

மறுநாள் பொழுது சாய்கின்ற நேரத்திற்கு ஏடு கொண்டு போன ஆள் தலை ஈத்துப் பசு ஒன்றும் அதன் கன்றும் உடன்கொண்டு வந்து சேர்ந்தான். புலவர் கண்களில் ஈரப்பசை தட்டியது. காளத்தி நாதரின் பரந்த மனத்தையும் தம் வாக்கிற்கு அவர் கொடுத்த மதிப்பையும் நினைத்தபோது, அவருக்கு ஆனந்தக்கண்ணிர் வந்தது.கொல்லையில் புதிதாகக் கீற்று வேய்ந்த மாட்டுக் கொட்டம் ஒன்று உண்டாக்க வேண்டிய அவசியம் இப்போது அவருக்கு எற்பட்டது.

'கறவைப்பசு தருக! என்று அதிகாரியைப் போல ஏடெழுதிக் கேட்டார். கனிந்த உள்ளத்துடன் கன்றோடு கூடிய பசுவை அனுப்பினார் காளத்தியப்பர்.