பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

15. பரம்பரைக் குணம்

திருச்சிராப்பள்ளிக்கு வந்தும் உச்சிப்பிள்ளையாரைத் தரிசனம் செய்யாமல் ஊர் திரும்ப மனம் இல்லை இராம கவிராயருக்கு. கையில் மிகுந்திருந்த பொருளை மேலே போர்த்தியிருந்த சரிகைத் துப்பட்டாவின் முன் தானையில் முடிந்துகொண்டே மலைக் கோட்டையை நோக்கி நடந்தார். அந்தி மயங்கும் நேரம். பூக்கடைகளும் சந்தனக் கடைகளுமாக மலைக்கோட்டை வாயில் மாலை நேரத்துப் பொலிவுடன் விளங்கியது. மல்லிகை, பிச்சி முதலிய பூக்களின் நறுமணத்தோடு கலவைச் சந்தனத்தின் புதுமணமும் மூக்கைத் துளைத்தது.’ கணிர் கணிர்’ என்று வந்த தாயுமானவர் கோவில் மணியோசை கோவிலில் சந்தியாகால பூஜை நடக்கிறது என்பதை ஊருக்கு அறிவித்தது.

கீழே, கடையில் வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழம், கொஞ்சம் பூ இவைகளை வாங்கி மேலே போர்த்துக் கொண்டிருந்த அந்தச் சால்வையில் சுற்றியவண்னம் படிகளில் ஏற ஆரம்பித்தார் கவிராயர். எந்தக் காலத்திலோ எவனோ ஒரு வள்ளல் மனம் விரும்பிக் கொடுத்த பரிசே அந்தச் சால்வை. கவிராயர் எங்காவது வெளியூர் புறப்பட்டால்தான் பொட்டியிலே உறங்கும் அந்தச் சால்வையும் அவரோடு உடன் போகும். ஏறக்குறைய இருபத்தைந்து வருட உபயோகமாகிய அதன் சேவையில் பட்ட வீரத் தழும்புகள் போல இரண்டோர் கிழிசல்கள் அதை அலங்கரித்தன. ஒரு கோடியில் காசு முடிச்சுடன் தேங்காய், பழம் முதலியவற்றையும் தாங்கியவாறே கவிராயரின் இடுப்பைச் சுற்றி விளங்கும் பேறு பெற்றது சால்வை. மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கப் படியேறித் தாயுமானவர் கோவிலை அடைந்த கவிராயர் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடிக்கொண்டே தரிசனத்தைத் தொடங்கினார். தாயுமானவப் பெருமானை வழி பட்டு முடிந்தபின் உச்சிப் பிள்ளையாரை நோக்கி உயர ஏறிச் சென்றார். யாருக்காக ஊருக்குப் புறப்பட்டவர் பயணத்தை நிறுத்திவிட்டுத் திரும்பி வந்தாரோ, அவரைத் தரிசிக்காமல்