பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
தமிழ் இலக்கியக் கதைகள்
 

துணியிலிருந்து பெருங்காயத்தைப் பிய்த்து எடுத்துக் கொண்டு ஆளைத் திருப்பி அனுப்பினார் செட்டியார். காளமேகம் அவரை மனத்தினுள் வைதுகொண்டே திரும்பிச் சென்று விட்டார்.

அதற்குப் பிறகு இப்போதுதான் அந்த வயிரவன் செட்டி யாரைக் கோவிலில் பார்க்கிறார். அந்தச் செட்டியாரை எப்படிப் பழிவாங்கலாம் என்றெண்ணிக் கொண்டிருந்த காளமேகத்திற்குத் திடீரென்று ஒரு யுக்தி தோன்றியது. 'கோவிலிலுள்ள முருகனைப் பாடுவதுபோல ஒரு வெண்பா பாடுவோம். அந்த வெண்பாவையே வேறு ஒருவகையாகப் பார்த்தால் செட்டியாரைத் திட்டுவதாயும் அமைய வேண்டுமாறு பாடிவிடுவோம்’ இந்தத் தீர்மானத்தோடு தூணில் சாய்வதிலிருந்து விடுபட்டுச் செட்டியாரைப் பின்பற்றி மூலத்தானத்தை நோக்கி நடந்தார் காளமேகப் புலவா.

செட்டியார் தோத்திரப் பாடல்களை வரிசையாகப் பாடி வழிபாட்டை முடிக்கவும், பின்னாலிருந்து வேறோர் குரல் வழிபாட்டைத் தொடங்கியது. எங்கேயோ கேட்ட குரல் போல் இருக்கவே வயிரவநாதன் செட்டியார் திரும்பிப் பார்த்தார். காளமேகம் ஒன்றும் அறியாதவர் போலப் பரம பக்தராக உருகி உருகிப் பாடிக்கொண்டிருந்தார். பாட்டை உற்றுக் கவனித்த செட்டியாருக்கு யாரோ ஓங்கி மண்டையில் அடிமேல் அடியாக அடிப்பது போலிருந்தது. ஒன்றும் பேசி வம்புக்கு இழுக்க முடியாத இரண்டுங் கெட்ட பொருளுடன் பாட்டு அமைந்திருந்ததால் செட்டியார் காளமேகத்தை முறைத்துப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து நழுவி விட்டார்.

“வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை-மங்காத

சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்

ஏரகத்துச் செட்டியாரே!” -

வெங்காயம் = வெம்மையான உடல், சுக்காதல் = வறண்டு போதல்.