பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
தமிழ் இலக்கியக் கதைகள்
 

என்ற சொல்லுக்கே அவமானம். இவர்களை ரசிகர்கள் என்று சொன்னால், இவர்கள் அசல் முதல் வரிசைக் கையாலாகாதவர்கள். எச்சிற் கையால் காக்காய் ஒட்ட முடியாதவன் எல்லாம் ரசிகனாக வேஷம் போடுகிறான். பசித்தபோது ஒரு கவளம் சோறும், கிழிந்தபோது நாலு முழம் துணியும் கலைஞனுக்குத் தர அஞ்சுகின்ற கயவர்களுக்கு ரசனை உணர்வும் இருக்கிறதா? அப்படியானால் ரசனை உணர்வு என்ற ஒன்று இன்றே இப்போதே மண்ணோடு மண்ணாக அழிந்து போய் விடட்டுமே!' இப்படி எண்ணி மனங்குமைந்தார் இராமானுஜப் பாவலர். தொண்டை வலிக்க இனிய குரலில் அழகிய செந்தமிழ்ப் பாடல்களால் பல வள்ளல்களைப் பாடிப்பாடி அலுத்து விட்டது அவருக்கு பாடி முடிகின்றவரை "ஆகா! அற்புதம்! அபாரம்! என்ன ஞானம்! என்ன கலை! இதுவன்றோ கவிதை!” என்றெல்லாம் புகழ்ந்தனர். முடிந்ததும் பரிசில் என்றால் கடிந்து மொழிகிறார்கள். கதவை அடைக்கிறார்கள். சற்றே வெளியேறக் காலந் தாழ்த்தினால் கழுத்தைப் பிடித்துக்கூட வெளியே தள்ளிவிடுவார்கள் போலிருக்கிறது, இந்தக் கையாலாகாத கலாரசிக சீமான்கள்!'

வறுமை முட்களில் சிக்கித்தவித்த அவருடைய ரோஜா உள்ளம் ஆதரவிழந்து தவித்தது. முடிவில் ரோஜாப் பூவின் முட்கள் போலக் கையாலாகாத இந்த ரசிகர்களைக் குத்தி வாட்டும் சொற்கள் அவருடைய ரோஜா உள்ளத்திலிருந்து வெடித்துச் சிதறுகின்றன. கனல் கக்கும் எரிமலைக் குழம்பு போலப் பழுக்கக் காய்ச்சிய சூட்டுக் கோலை ஒத்த சொற்களால் வாய்ப் பந்தல்காரர்களுக்கு ஒரு சூடு கொடுக்கிறார். அந்தச் சூடு நெருப்பிலே காய்ச்சிய சூட்டுக்கோலால் இடப்பட்ட சூடாக இருந்தால் மறைந்து தழும்பு ஆறிப்போயிருக்கும். ஆனால் அது சொல்லிலே காய்ச்சிச் செய்யுளுருவிலே கொடுத்த சூடு! என்றும் ஆறாத சூடு, ஏன்? ஆற்றிக்கொள்ள முடியாத சூடு. கையாலாகாதவர்களின் போலி ரசனைக்குப் பரம்பரையாக நிலைத்து விட்ட சூடு. சூட்டைக் கொடுக்கும் பாடல் இன்றும் சுடச்சுட வாழ்ந்து வருகிறது. 'அவர்கள' உள்ள வரையில் அதுவும் வாழத்தானே வாழும்.