பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

45

எண்ணான்கு முப்பத்திரண்டு பற்காட்டி இசையுடனே
பண்ணாகச் செந்தமிழ்பாடி வந்தாலும் இப்பாரிலுள்ளோர்
அண்ணாந்து கேட்பர் அழகு அழகு என்பர் அதன் பிறகு
சுண்ணாம்பு பட்ட வெற்றிலையும் கொடார் கவி சொன்னவர்க்கே.

வறுமையில் ஏமாறிய கலைஞனின் மனோபாவம் துயர் வடிவமாக இந்தப் பாட்டில் அடியிலிருந்து முடி வரை அமைந்து கிடக்கிறது. இராமனுஜப் பாவலரைப்போல் எத்தனையோ கலைஞர்கள், கவிஞர்கள், திறமைசாலிகள் கலையுலகத்தில் ஏமாற்றம் என்ற உணர்விற்கு ஒரு பாரம்பரிய வாரிசாக விளங்கி வருகிறார்கள். என்றைக்கும் அந்த ஒரு பரம்பரை மூலையில் ஒதுங்கிக் கிடக்கிறது. அப்படி ஒதுங்கி முடங்கச் செய்யும் கையாலாகாத ‘ரசிக பரம்பரை’க்கும் பஞ்சமே இல்லை.

18. அழியாக் கலை

திருவோலக்க மண்டபத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார் ஒளவையார். பல காத தூரம் பயணம் செய்த களைப்பில் உடல் சோர்வுற்றிருந்தது. குலோத்துங்க சோழனைக் காண்பதற்காக வந்திருந்த அவர் வாயில் காவலனிடம் உள்ளே செல்ல ஏற்ற சமயமறிந்து, தம் வரவைத் தெரிவித்துவிட்டு வருமாறு கூறி, மண்டபத்திற்குள் அனுப்பியிருந்தார். அவன் மீண்டு வந்து மறுமொழி அளித்ததும், உள்ளே செல்லலாம் என்ற கருத்துடனேயே அவர் சபா மண்டபத்திற்கு வெளியே காத்திருந்தார்.

பொழுது விரைவாகச் சென்று கொண்டிருந்தது. உள்ளே சென்ற காவலன் இன்னும் வரக்காணோம். கால் கடுக்க நின்று கொண்டிருந்தார் தமிழ் மூதாட்டியார்.வெகு நேரத்திற்குப் பிறகு காவலன் கையில் ஒரு புத்தம் புதிய நூற்சேலையுடன் வெளியே வந்தான்.