பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
51
 

ஒப்புக்கொண்டார். கொடைவள்ளலும் கவி வள்ளலும் ஒருவரை ஒருவர் மதித்து அன்புடன் பழகும்போது மறுப்புக்கு இடமிருக்க முடியாதல்லவா? அடுத்த இரண்டொரு நாட்களில் விருந்துக்கு ஏற்ற நாள் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லி விட்டு வடுகநாதர் சென்றார். . -

விருந்து நாள் வந்தது. வீட்டில் வடுகநாத முதலியாரின் தம்பி ஒருவன் வெகு நாட்களாகச் சூலை நோயோடு படுத்த படுக்கையாகக் கிடந்தான். வடுகநாதருக்கு அந்தத் தம்பியின்மேல் அளவு கடந்த ஆசை. அவன் நோய் தீர விதவிதமான வைத்திய வித்தகர்களையெல்லாம் கொண்டு மருந்து கொடுத்து வந்தார். துரதிருஷ்டவசமாகப் புகழேந்திப் புலவருக்கு விருந்திட வேண்டிய அன்று அவனுடைய நோய் வேதனை மிகுந்து நம்ப முடியாத கட்டத்தை அடைந்திருந்தது.

ஏற்கெனவே விருந்துக்குரிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தாகிவிட்டது. வடுகநாதர் புகழேந்திப் புலவரை அவர் தங்கியிருக்கும் இடத்திலிருந்து மேளதாள மரியாதைகளோடு அழைத்து வந்தார். தம்பியின் நிலையை எண்ணிப் பதைத்தது அவர் நெஞ்சு அதே சமயத்தில் 'அழைத்த விருந்தை நிறுத்தினான்’ என்ற பழியும் ஏற்படக்கூடாது என்பதை எண்ணி மலர்ந்த முகமும் புன் சிரிப்புமாக உபசாரங்களை நடத்தினார். புலவரை ஆசனமிட்டு அமர்த்தி உண்ணச்சொல்லித் தாமும் மனைவியுமாகச் சேர்ந்து உபசரித்தனர். புகழேந்திப் புலவர் உண்டு கொண்டிருந்தார். இடையே யாரோ வந்து அழைக்கவே வடுகநாதர் வீட்டின் மறுபுறத்திலுள்ள சிறு கட்டிடம்வரை போய்த் திரும்பி வந்தார். இப்போது அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்த புகழேந்திப் புலவருக்கு அவர் எதையோ மறைத்து நடிப்பது போலத் தெரிந்தது. வடுகநாதர் முகத்தில் ஈயாடவில்லை. கண்கள் சற்றே கலங்கிச் சிவந்திருந்தன. வாய் சிரிக்க முயன்றது. முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொள்ள அவர் முயன்றார். “என்ன வடுகநாதரே! ஏதாவது வருந்தத்தக்க செய்தியா?.” என்று சோற்றைப் பிசைந்துகொண்டே அண்ணாந்து பார்த்தபடி கேட்டார் புகழேந்தி.