பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56
தமிழ் இலக்கியக் கதைகள்
 

முன்னால், வறுத்த அரிசியைப் பொடி செய்த மாவைச் சிறிது தூவிவிட்டுத் தாளிப்பது வழக்கம். கூட்டு தண்ணீராக நெகிழ்ந்து போய்விடக்கூடாது என்பதற்காகவும், வாசனைக்காகவும் இப்படி ‘மாவு' தூவுவது அவசியமாக இருந்தது. விறலியர்கள் இதைக் கூறவும் ஒளவையார் அரண்மனை உக்கிராணத்திலிருந்து ஒரு சிறங்கை அரிசி வாங்கி வருமாறு ஆள் ஒருவனை அனுப்பித்தார். அந்த ஆள் உக்கிராணத்திற்குச் செல்லும்போது நாஞ்சில் வள்ளுவனே ஏதோ காரியமாக அங்கே வந்திருந்தான். 'ஒளவையார் ஒரு சிறங்கை அரிசி கேட்டு விட்டார்' என்று வந்த ஆள் கூறியதும், உக்கிராணத்து மேற்பார்வையாளன் ஒரு பிடித்த பிடி அரிசியை எடுத்து, வந்தவனுடைய மேலாடையில் இடுவதற்குச் சென்றான். அப்போது நாஞ்சில் வள்ளுவன் சட்டென்று அவன் கையைப் பிடித்துத் தடுத்தான்.

"இதைக் கேட்டு அனுப்பிய தமிழ்ப் புலமை அரசி இவ்வளவு கொடுத்தாலும் பெற்றுக் கொண்டு விடுவார். பிடி அரிசியாயிற்றே என்று அவர் மறுக்கப் போவதில்லை. ஆனால் ஒரு பெரும் புலமைச் செல்வி வாய் திறந்து கேட்டு விட்டிருக்கும் போது, நாம் ஒரு சிறங்கை அரிசியை மட்டும் கொடுத்தோம் ஆயின் அது நமக்கு எவ்வளவு பெரிய இழிவு தெரியுமா? போய் உடனே பட்டத்து யானையை இங்கே கொண்டு வா! கொண்டுவந்து, அது சுமக்கும் அளவு அரிசிப் பொதிகளை அதன்மேல் ஏற்றித் தாமதம் செய்யாமல் ஒளவையாரிடம் அனுப்பு நம் பெருமையை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? நான் சொன்னபடி உடனே செய்” என்று உக்கிராண மேற்பார்வையாளனுக்கு அப்போதே நாஞ்சில் வள்ளுவன் கட்டளை இட்டான். 'கொடையின் பெருமை அதைக் கொடுப்பவர்க்கே' என்பதை அவன் நன்கு உணர்ந்து கொண்டவனாக இருக்க வேண்டும். எனவேதான் கீரைமேல் தூவும் மாவுக்கு அவருக்கு ஒரு சிறங்கை அரிசி போதும் என்று அறிந்திருந்தும் இவ்வாறு செய்தான் அவன். இந்தச் சம்பவத்தைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் ஒளவையார் நயமாகப் பாடியுள்ளார். (புறம்.140)