பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

59

அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. பாடுகின்ற பாட்டைக் கேட்டுவிட்டுப் பொன்னையும் பொருளையும் வாரியிறைத்து விடவேண்டாம், மனமார ஒருவேளை உணவளித்து உபசரிக்கக் கூடாவா இவர்கள் உள்ளங்களில் கருணை மலரவில்லை?

சிந்தித்துக் கொண்டே நடந்த அவர் நிற்கும்படி செய்தான் பக்கத்து மரத்தடியிலிருந்து தொண்டிக்கொண்டே ஓடிவந்த அந்தப் பிச்சைக்காரன். அவருக்கு முன் வந்து நின்ற அவன், அவர் கையிலிருந்த சுவடி மூட்டையில் கண்களை ஓடவிட்டவாறே ஆவலோடு கட்கத்தில் இடுக்கிக் கொண்டிருந்த தன் திரு ஓட்டை எடுத்து நீட்டினான். அந்தப் பிச்சைக்காரன் முகத்தை நிமிர்த்து பார்த்த கவிராயருக்கு அழுவதா, சிரிப்பதர் என்று தெரியவில்லை. அந்த முகத்தில் நெளிந்த நம்பிக்கையின் சாயலும், கெஞ்சும் பாவமும், உதடுகள் அகல விரிந்து வெளித் தெரிந்த அத்தனை பற்களும் அவரையே சற்று வருந்தித் திகைக்கச் செய்து விட்டன. இரண்டு நாட்களாகச் சோறு காணாத அவர் எங்கே போவார் அவனுக்குச் சோறு கொடுக்க?

“அப்பனே! இது கட்டுச் சோற்று மூட்டையல்ல! வெறும் ஏட்டுச் சுவடிகள்!” என்று அவர் அவனை நோக்கிச் சொல்லி விட்டு நகர்ந்தபோது, அவனுடைய இளித்த பற்களிலும் இரங்கிய முகத்திலும் தெரிந்த நம்பிக்கையின் வீழ்ச்சி அவருக்கே வேதனையாக இருந்தது. ஏமாற்றத்தோடு மரத்தடியை நோக்கித் திரும்பினான் அந்தப் பிச்சைக்காரன்.

கவிராயர் சிந்தனை தொடர நடையையும் தொடர்ந்தார். இப்போது அவருக்கு ஒருவகையில் திருப்தி. “தமிழ் படிக்காத புலமையற்றவர்களிலும் கூடச் சோற்றுக்குத் திண்டாடுவோர் இருக்கத்தான் இருக்கிறார்கள்” என்பதுதான் அது. பொன்னையும் பொருளையும் கொடுத்து ஒரு சிலரை உயர்ந்த முறையில் இரட்சிக்கிறான் படைத்தவன். போகட்டும்! பொன்னும் பொருளும் கொடுத்து இரட்சிக்க முடியாதவர்களுக்குக் கல்லையும் மண்ணையும் உணவாகக் காய்ச்சிக் குடிக்கலாம் என்றாவது வழி செய்திருக்கக் கூடாதா? அவைகளை உணவாக