பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
61
 

வியந்தவாறே வந்து கொண்டிருந்தார் கவிராயர். பசி, தாகம், இளப்பு, களைப்பு இவைகளெல்லாம் வயிற்றுக்கும் உடலுக்கும் தானே?...இரசனைக்கு இல்லையே? அவர் கவிதையுள்ளம் படைத்தவர். வயிறு வற்றி வாயுலர்ந்து போனாலும் இரசனையை வற்றவிடாத அளவுக்கு உள்ளம் பரந்து விரிந்து பண்பட்டவர். மலையும் அதன் சிகரங்களை அணைத்துச் செல்லும் மேகக் கூட்டமும், பொங்கிப் பாயும் அருவியின் பொலிவும், மலைச் சாரலில் எடுப்பாக அமைந்திருந்த கோவிலும் அவர் கவனத்தைக் கவர்ந்ததில் வியப்பில்லை.

மேளதாள ஆரவாரத்தோடு கோவிலுக்கு வந்து கொண்டிருந்த ஒரு கூட்டம் அவரது ஆழ்ந்த சிந்தனையைக் கலைத்து நிறுத்தியது. கவிராயர் விலகி நின்றுகொண்டு கூட்டத்தைக் கவனித்தார். 'கூட்டத்தின் நடுநாயகமாக விளங்கிய ஒருவர் படாடோபமான தோற்றத்துடன் மிக்கசெல்வந்தர் போலக் காணப்பட்டார். அலங்காரமான பட்டு ஆடை மேலே ஒளி வீசும் பீதாம்பரம். காதில் ஜாஜ் வல்யமாகப் பிரகாசிக்கும் நீலநிறத்து வைரக் கடுக்கன்கள். நெற்றியில் சவ்வாதுப்பொட்டு. மார்பில் ஒளிவிடும் நவமணி மாலை. கைவிரல்கள் ஐந்திலுமே மோதிரங்கள். அவரைச் சுற்றிச் சென்றவர்கள் கோயிலில் வழிபாடு செய்வதற்கு வேண்டிய பலவகைப் பொருள்களை ஏந்திச் சென்றனர்.

கூட்டத்தையும் அவரையும் கவனித்துக் கொண்டிருந்த புலவர் கவனத்தை, பின்புறம் நின்றுகொண்டு இதே காட்சியைக் கண்டு கொண்டிருந்த வேறு இருவர் பேசிக் கொள்வது கவர்ந்தது.

“தம்பீ! இவனுக்கு வந்த யோகத்தைப் பார்! எனக்குத் தெரிந்து மலைச் சாரலிலிருந்து புல்லும் விறகுக் கட்டும் சுமந்து கொண்டிருந்தவன்! இப்பொழுது பார்த்தால் அப்படிச் சொல்ல முடியுமா? கையிலும் - நல்ல இருப்பு, நிலங்கரைகளோ...? அவ்வளவும். நன்செய்! நாள் ஒன்றுக்கு நூறு பொதிக்குக் குறையாமல் களஞ்சியத்தில் நெல்லைக் கொட்டுகிறான், இதைத்தான் தம்பி, பெரியவர்கள் அதிர்ஷ்டம் என்கிறார்கள்