பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

65

'வள்ளல் எதற்காக அருகில் வருமாறு அழைக்கிறார்’ என்ற காரணம் புரியாத வியப்புடன் புலவர் அவரருகே சென்றார். தம் அருகே வந்த புலவரைப் பக்கத்தில் மரியாதையாக அமரச் செய்த வள்ளல், அவரது வலது கைவிரல்களை உரிமையோடு பிடித்தார். புலவரோ ஒன்றும் புரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தார். வள்ளலின் கைவிரலை அணி செய்து கொண்டிருந்த அழகிய வைர மோதிரம் புலவர் கைவிரலுக்கு மாறியது. ஊருக்குப் புறப்படும் நேரத்தில் வணங்கிய தம் கையைக் கண்டு அருகில் வரவழைத்து மோதிரமிட்ட அவர் பெருங்குண நலத்தை எண்ணி,எண்ணி வியந்தது புலவரது ஏழையுள்ளம் அந்த வியப்புக்கு நடுவே ஒரு கற்பனை அருமையாகத் தோன்றியது. “என்னிடம் பரிசில் பெற்ற பிறகு, தமிழ்ச் சுவை அறியாத வேறு எந்தப் புல்லர்களிடமும்போய் இந்த வலது கைவிரல்களை நீட்டிக் கேட்கவேண்டாம். நானே என்றும் கொடுப்பேன்” என்று தன் கைக்கு ஒரு தடை காப்பாக அந்த மோதிரத்தை வள்ளல் இட்டதாகக் கற்பித்துப் பாடினார் புலவர்.

கா ஒன்றும் கைத்தலத் தண்ணல்
செல்லூரன் கனிந்து நம்மை
வா என்று அழைத்து இட்ட
மோதிரமே வண்மையான தமிழ்ப்
பா ஒன்றும் சற்றும் அறியாத
புல்லர் தம் பக்கலிற் போய்
தா என்று கையெடுத்து ஏற்காமல்
இட்ட தடை இதுவே"

கா ஒன்றும் = கற்பகமரம் போன்ற, கைத்தலம் = கைகள், கனிந்து = பரிந்து. பா = பாட்டு.

வள்ளல் அணிவித்த மோதிரம் அழகான கற்பனை ஒன்றை அளித்துவிட்டது புலவருக்கு.

உ.பூ.–5