பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தமிழ் இலக்கியக் கதைகள்

ஊரிலிருந்து புறப்படுவதற்கு முதல்நாள் எண்ணெய் தேய்த்து நீராடியதுதான். அதற்குப் பிறகு தலைப்பக்கம் எண்ணெயை மறந்தும் கொண்டு போனது கூட இல்லை. அது சிக்குப் பிடித்துச் சடை சடையாக உறைந்து போயிருந்தது.

இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சென்னைக்கு வந்து சிவபெருமான் பெற்றிருக்கும் அத்தனை கதிகளையும் தாமும் பெற்றுவிட்டதாக ஒரு குறும்புக்கார எண்ணம் அவருக்குத் தோன்றியது.அந்த எண்ணத்தை இரண்டு பொருள் அமைந்த ஒரு அருமையான சிலேடைப் பாட்டாகப் பாடி வைத்தார்.

சென்னபுரி மேவிச் சிவன் ஆனேன் நல்ல
அன்னம் அறியாதவன் ஆகி - மன்னு சிரங்
கைக்கொண்டு அரைச் சோமன் கட்டிச் சடை முறுக்கி
மெய்க் கொண்ட நீறணிந்து மே”

அன்னம் = சோறு, நான்முகன். சிரம் கைக் கொண்டு = சிரங்கைக் கொண்டு, சோமன் ஆடை பிறை. நீறு. புழுதி = சாம்பல்.

“நல்ல அன்னமாக உருவெடுத்து நான்முகனும் காண முடியாதவனாகிக் காபாலி மண்டையோடு கைக்கொண்டு பிறைமதியைச் சடையிற் கட்டி மேனி முழுதும் வெண்ணீறணிந்தான்” என்று சிவபெருமான் கதிகட்கும், “நல்ல சோறு அறியாதவனாகிச் சொரி சிரங்கைக் கொண்டு, கிழிந்த ஆடையை அரையிலணிந்து, தலையில் எண்ணெய் படாது சடை பின்னிட உடம்பெல்லாம் புழுதி படியச் சென்னையிலே சிவகதி கிடைத்தது எனக்கு” என்று தமக்கும் பொருளமையச் சிலேடையாக இதைப் பாடினார் இராம கவிராயர். பாட்டு, மிகவும் பொருள் செறிந்தது.

28. பூபன் போட்ட கடுக்கன்

புலமை நெஞ்சத்தின் சமத்கார சாதுரியம் அருமையாக வெளிப்படக்கூடிய இடம் புலவரின் தற்குறிப்பு ஏற்றமே.