பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30. கூண்டுக்கிளி

படிக்காகத் தம்பிரானும் அவர் நண்பராகிய வேறொரு புலவரும் வள்ளல் ஒருவரைக் காண்பதற்காகப் பயணம் செய்துகொண்டிருந்தனர். கால்நடையாகச் செல்லும் பயணமானாலும் இருவரும் தேர்ந்த தமிழ்க் கவிஞர்களாகையால் மனத்திற்கு விருப்பம் சென்றவாறெல்லாம் உரையாடிக் கொண்டே சென்றனர். தனிமை, சிந்தனைக்கு ஏற்றதுதான். ஆனால் செயலுக்கு ஏற்றதில்லை. நடந்து போதல் முதலியவற்றிற்குத் தனிமை சற்றே துன்பம் கொடுக்கத்தான் செய்யும். சிந்திப்பதற்கோ தனிமையை விடச் சிறந்த கருவி வேறெதுவும் இருக்க இயலாது. எனவே சேர்ந்து செல்லும் பயணத்தில் வழிநடைக் களைப்பை உணரும் வாய்ப்பே அவர்களுக்கு எற்படவில்லை.

வழியில் ஒர் அழகிய நகரை அவர்கள் கடக்க நேரிட்டது. வழியை ஒட்டி அமைந்திருந்த ஒரு பெரிய பழத்தோட்டமும், பக்கத்தில் படிக நிறத்து நீர் கலகலவென்று ஒடிக்கொண்டிருந்த சிற்றாறும் ஆக இருந்த இடத்திற்கு வந்ததும் படிக்காசருக்கு அங்கிருந்து மேலே அடியெடுத்து வைக்கக் கால் எழவில்லை.அந்த இடத்தின் இயற்கை வனப்பு அவரைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. கிளி, குயில் இவைகளை அந்தத் தோட்டத்தில் கிளைக்குக் கிளை காண முடிந்தது. வெய்யில் உள்ளே நுழைய முடியாத அளவு அடர்ந்து பசுமை நெருங்கிய தோட்டம் அது. விருப்பத்தை அடக்க முடியாமல் நண்பரோடு தோட்டத்திற்குள் நுழைந்தார் படிக்காசர். மாணிக்கச் சிவப்போடு கனிந்த நிலையில் சரம் சரமாகத் தொங்கும் மாம்பழங்கள், தங்க வண்ணம் பொங்கும் கொய்யாக் கனிகள், இன்னும் எண்ணற்ற கனிகள் மயமாகக் காட்சியளித்தது தோட்டம்.

இயற்கையை இரசிக்க வந்த படிக்காசரும் நண்பரும் கைக்கு எட்டியனவும், கீழே உதிர்ந்து கிடந்தனவும் ஆகிய கனிகளையும் இரசிக்கத் தொடங்கினார்கள். தின்னத் தெவிட்டாத தீங்கனிகள்!