பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
77
 

தின்று கொண்டே இருந்தனர். முதலில் தாம் தண்ணீர் குடித்து விட்டு வந்துவிடுவதாகச் சொல்லி விட்டு அருகில் ஒடிக்கொண்டிருந்த நதிக்குச் சென்றார் நண்பர். காய்நிலையும் கனிநிலையும் கொண்டு, அரைகுறைப் பழமாக இருந்த 'அரிசிக் கொய்யா'வின் விதைகளைச் சுவைத்துக் கொண்டிருந்த படிக்காசர் முந்திரிப் பருப்புப்போன்ற இனிமை பொருந்தியுள்ள அதன் விதைகளை எண்ணி வியந்துகொண்டே கீழே கிடந்த அடுத்த கொய்யாக் கொத்தை எடுத்தபோது, இரும்பு வலிமை படைத்த கையின் முஷ்டி ஒன்று அவர் தோளின்மேல் விழுந்தது.

ஐயனார் கோவிற் குதிரைபோல ஆகாயத்துக்கும் பூமிக்குமாக வாட்டசாட்டமான தோற்றத்தோடும் தம்முன் அனல் கக்கும் கண்களோடும் நின்று கொண்டிருக்கும் காவற்காரனைக் கண்டதும் படிக்காசருக்கு வாயடைத்துப் போய் விட்டது. பரபரவென்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அவன் இழுத்துச் செல்லத் தொடங்கினான். படிக்காசருக்கு என்ன செய்யலாம் என்றே தெரியவில்லை. அவனுக்கு முன்னால் வாயைத் திறந்து பேசுவதற்கே அவருக்கு அச்சமாக இருந்தது தண்ணீர் குடிக்கப் போயிருந்த நண்பரோ இன்னும் திரும்பி வரவில்லை. புலவருக்கு நண்பர் திரும்பி வராததும் ஒரு காரியத்திற்கு நல்லதாகவே பட்டது. அவர் வந்து தம்மை இந்தக் கோலத்தில் பார்த்துவிடவேண்டாம்.அவரும் இந்த எமனிடம் அகப்பட்டுக் கொள்ள வேண்டாம். பேசாமல் இவனோடு கொஞ்சதுரம் சென்றதும் மறைவான இடம் ஒன்றிலே கெஞ்சிக் கதறி விடுவித்துக் கொண்டு வந்து விட்டால் பின் நண்பரை இங்கே வந்து சந்தித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு அவர் அவனோடு நடந்தார். காவற்காரன் அவரை நகரத்திற்குள் அழைத்துக்கொண்டு போனான். பல தெருக்களைக் கடந்து ஊரின் நடு மையமாக அமைந்திருந்த அந்தப் பெரிய அரண்மனையின் உள்ளே இழுத்துக் கொண்டு போனான். புலவர் இடையிலே அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ளச் செய்த முயற்சி பலிக்கவில்லை. தன்னை விட்டு விடுமாறு கேட்டபோது அவன் பார்த்த அந்த நெருப்புப் பார்வை