பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
தமிழ் இலக்கியக் கதைகள்
 

மலையடிவாரம். அடர்ந்து வளர்ந்திருந்த காடு. இருவர் நடந்து போகின்றனர்; இல்லை, ஒருவர் நடந்து போகிறார். நொண்டியாகிய மற்றொருவர் அவருடைய முதுகில் ஏறிக் கொண்டிருக்கிறார். நடப்பவர் குருடர். முதுகில் அமர்ந்திருக்கும் நொண்டி அவருக்கு வழியைக் காட்டுகிறார். காண முடியாத குருடர் காண முடிந்த நொண்டியைச் சுமந்து அவர் உதவியால் வழி நடக்கிறார். அவர்களுக்கிடையில் உள்ள தொடர்பு இந்த அளவில் மட்டும் அமைந்துவிடவில்லை. இருவரும் நண்பர்கள். தமிழில் தேர்ந்த புலமை பெற்றவர்கள். பழு மரங்களை நாடிச்செல்லும் பறவைகளைப்போல் வள்ளல்களை நாடிச் சென்று தங்கள் புலமையைப் பாட்டுருவில் வெளிக்காட்டிப் பரிசில் பெறுவதுதான் அவர்கள் வாழ்க்கை. ஆனால் வள்ளல்கள் எல்லோருமா இரசிகர்களாக இருக்கிறார்கள்? இல்லையே. சிலரிடம் இகழ்ச்சியும் வேறு சிலரிடம் இல்லையென்ற பெரும் பொய்யும் ‘சிறப்பான பாட்டு’ என்ற கையாலாகாத வாய்ப் பாராட்டும்கூடப் பெறவேண்டியிருந்தது. முழு மனிதர்களாக இருந்தாலாவது இந்தத் துன்பத்தை ஒருவாறு தாங்கிக் கொள்ள இயலும். குருடரும் நொண்டியும் கூடிவாழும் கூட்டுறவு வாழ்க்கை, ஒருவரின்றி மற்றொருவர் ஓரணுக்கூட அசைய முடியாது. கண் தெரிந்த நொண்டி வழியைச் சொன்னாலும் கண் தெரியாத குருடருக்கு, காட்டிலும் மலையிலும் மேட்டிலும் பள்ளத்திலும் நடப்பது பெருத் தொல்லையாக இருந்தது. இவ்வளவு தொல்லைகளையும் மீறித் தோன்றுகின்ற பெரிய தொல்லை ‘இல்லை’ என்று கூறும் வள்ளல்களின் கூசாத எதிர்மறை வாய்ச்சொல்.

நடந்து கொண்டிருந்த குருடர் ஒரு சிறு பள்ளத்தில் தெரியாமல் காலை விட்டுவிடுகிறார். சிறிது தடுமாறுகிறது. மேலே கொஞ்சநேரம் எங்கேயோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த நொண்டி, “மெல்ல, மெல்லப் பார்த்து நடவுங்கள்” என்கிறார். அதைக் கேட்டு ‘என்னடா இவன் நம் முதுகில் சவாரி விடுவதும் அல்லாமல் என்னென்வோ பேசுகிறானே’ என்று வருத்தப் பட்டிருக்க வேண்டும் குருடர். அதுதான் இல்லை. அமைதியான