பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84
தமிழ் இலக்கியக் கதைகள்
 

ஆனால் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்க்கை அமைப்பில் உறவிலும் பந்தங்களின் பிணைப்புக்களிலும் நெருக்கம் அதிகம் ஓர் ஊர், ஒரு மொழி, ஒரு நோக்கம் என்று வாழ்க்கைக்கு மீற முடியாத எல்லைகள் இருந்தன அப்போது, ஒரு மனிதனின் வாழ்க்கை அவன் வாழ்கின்ற இடத்தில் 'பதிவது' என்ற அர்த்தத்தில்தான் ஊர்களுக்குப் 'பதி' என்று தமிழில் பெயர் வைத்திருந்தார்கள். இப்போதுள்ள நிலையிலோ எந்த ஊரிலும் எதிலும் பதியாமல் ஒடுகிற இயல்பு உத்தியோக வாழ்க்கைக்கு வந்துவிட்டது. கணவன் மனைவியைப் பிரிந்து தொடர்ந்தாற் போல் சில ஆண்டுகள் வெளியே இருக்கிற நிலை இப்போது இயற்கை. ஒரு நூற்றாண்டுக்கு முந்தியோ அப்படி இருப்பது குற்றம்.அப்படிப் பிரிந்து வாழும் வாழ்வைக் குடும்ப வாழ்வு என்று ஒப்புவதில்லை. மக்களின் ஒழுக்கமே பதிந்து வாழ்வதைப் பொறுத்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த புலவர் ஒருவர் மனைவியைப் பிரிந்து வெளியூரில் இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட உணர்வைப் பற்றி இங்கே ஒரு சம்பவத்தைக் காணலாம். இல்வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் நூறு ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் எப்படி மாறி எளிதாகியிருக்கிறதென்பதை இந்தச் சம்பவம் விளக்கிவிடும்.

புதிய போராட்டம்

சுந்தரக் கவிராயர் என்று ஒரு புலவர் இருந்தார்.நல்ல அழகர் அவர். அப்போது அவருக்குச் சரியான வாலிபப் பருவம். மெல்ல கண்திறந்து முல்லைச் சிரிப்பினொடு மெல்லியலார் பார்த்து மகிழும் வயது.அந்த வயதில் வறுமை இருப்பது மனிதனுக்கு ஒரு சாபக்கேடு. ஏழைமை, இளமையின் உற்சாகத்தையும் மகிழ்ச்சித் துள்ளலையும் மறக்கச் செய்து விடும். வறுமையோடு வறுமையாகப் பெற்றோர்கள் அவருக்கு ஒர் அழகான பெண்ணாகப் பார்த்துத் திருமணமும் செய்து வைத்து விட்டார்கள். வயிற்றோடு போராடிக் கொண்டிருந்தவனை மன்மதனோடும் போராட விட்டு விட்டார்கள்.