பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
86
தமிழ் இலக்கியக் கதைகள்
 
பிரிவு வேதனை

ஒரு நாள் இரவு வாடைக் காற்றில் தரையில் விரிக்க விரிப்பின்றி மேலாடையை விரித்து முழங்கையை மடித்துத் தலையணைபோல் வைத்துப் படுத்திருந்தார் கவிராயர். அது வெளியூர் படுத்திருந்த இடம் சத்திரத்துத் திண்ணை, வயிறோ பட்டினி, வயிற்றைவிட அதிகமான பசி மனத்தில் உண்டாகியது. அனாதைபோல் அப்படி வாடைக் காற்றில் பசியோடு படுத்திருப்பது அவருக்கு என்ன வேதனையைக் கொடுத்ததோ! நினைவுகள் சூடேறிக் கொதித்தன. அவள் அங்கே! நான் இங்கே! இப்படி வாழ்வதற்கு நான் என்ன பாவம் செய்தேன்? வாழ்வைப் படைத்த விதியும், விதியைப் படைத்த இறைவனும் என்னை மட்டும் ஏன் சோதிக்க வேண்டும்? முட்டாள்களுக்குப் பிச்சை கொடுக்கிற தகுதியையும், அறிவாளிகளுக்குப் பிச்சை எடுக்கிற நிலையையும் படைத்த படைப்புக் கடவுளை என்ன செய்தால்தான் என்ன? சில பேருக்கு அறிவைக் கொடுத்து வயிற்றைக் காயவிடுவது பல பேருக்குப் பணத்தைக் கொடுத்து மனத்தைக் கொடுக்க மறந்துவிடுவது! இதுதான் படைப்பின் நியதியா? அந்தப் படைப்புக் கடவுளுக்கு நான் சாபம் கொடுக்கிறேன். நான் பட்ட இதே பிரிவு வேதனையை அவனும் பட்டால்தான் எனது துன்பம் அவனுக்குத் தெரியும். நான் என் இளம் மனைவியைப் பிரிந்து ஊரூராகச் சுற்றிக் கொண்டு பட்டினி கிடப்பதுபோல் படைப்புக் கடவுளும் தன் மனைவியாகிய கலைமகளைப் பிரிந்து ஊரூராகத் திரிய வேண்டும். வாடைக் காற்றில் மெலிய வேண்டும். விரிப்பின்றி வெறுந்தரையில் படுக்க வேண்டும். அப்படியெல்லாம் துன்பப்பட்டால்தான் என்னைப் படைத்தவனுக்கு என் துன்பம் தெரியும்' என்று அந்த வேதனையை ஒரு பாட்டாக எழுதிவைத்தார் கவிராயர்.

நறையொழுகுங் குழலாளை அமுதொழுகு
   மொழியாளை நயனவேலிற்
பிறையொழுகும் நுதலாளைப் பிரிந்திருக்க
   இப்பிறப்பிற் பெரிதும் யான்செய்