பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
88
தமிழ் இலக்கியக் கதைகள்
 

'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்று பழமொழி வழியாகச் சொல்லின் சாதாரணத்திற்கு அப்பாற்பட்ட சக்தி பேசப்படுகிறது. அதுவும் படித்தவர்களிடம் சொல்லின் பயனை நுகரும்போதும் சரி, கொடுக்கும் போதும் சரி, அதற்குரிய சக்தியின் மாற்றுக் குறையாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கத்தின் மாற்று நிலைகளைப் பொற்பரிசோதகர்கள் கண்டறிவது போலவே சொல்லின் நன்மை தீமைகளைக் கண்டறிந்து சொல்ல வேண்டும்.

மதுரகவிராயர் ஆனந்தரங்கப் பிள்ளையிடம் ஏற்கெனவே நல்ல பழக்கம் உடையவர்தாம். அடிக்கடி ரங்கப் பிள்ளையிடம் உதவி பெற்றவருங்கூட அப்படியிருந்துங்கூட அன்று என்னவோ வருத்தமுறும்படியான அந்தச் சம்பவம் நடந்து விட்டது. படித்தவராக நான்கும் தெரிந்த அறிவுடன் விளங்கும் பழக்கமான புலவர் ஒருவரை நோக்கி அப்படி மரியாதை குறைவான வார்த்தைகளை அவருந்தான் சொல்லியிருக்கக் கூடாது. ஏதோ போதாத காலம், ஆத்திரத்தில் வாய்தவறி வார்த்தைகள் வந்துவிட்டன. 'விஷக்கடி வேளை' என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசாங்க விஷயமாய் அப்போது சில நாட்களாக ஏதோ ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தார் ஆனந்தரங்கர். சென்னையைச் சேர்ந்த பிரம்பூர் அவருடைய பூர்வீகமாக இருந்தாலும், அவருடைய தகப்பனார் காலத்தில் இருந்தே புதுச்சேரியில்தான் வாசம். தகப்பனார் காலத்திற்குப் பின்பு தம் சொந்த முயற்சியால் படிப்படியாக முன்னேறி துவிபாஷி பதவியை அடைந்து அதைப் பொறுப்புடனே நிர்வகித்து வந்தார் அவர்.

அந்தப் பெரும் பதவியில் அமர்ந்து அவர் புதுவை அரசாங்கத்தின் முக்கிய உத்தியோகஸ்தராகப் பணியாற்றி வந்தபோதுதான் மதுரகவிராயர் அவரை அடிக்கடி சந்தித்துத் தமக்கு அவ்வப்போது தேவையான உதவிகளைப் பெற்றுச் செல்வார். அவ்வாறு அவர் சந்திக்கும் போதெல்லாம் நகை