பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தமிழ் இலக்கியக் கதைகள்

இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்துதான் மதுரகவிராயரை அங்கே இனியும் தங்கலாமா வேண்டாமா என்று எண்ணும்படி செய்தன. இறுதியில் அவர் ஒரு முடிவிற்கு வந்தார். ‘மறுநாள் காலை எப்படியும் வள்ளலை நேருக்கு நேர் சந்தித்துத் தாம் வந்த காரியத்தைக் கூறி உதவி கேட்பது. அவர் கொடுத்தால் பெற்றுக் கொள்வது, இல்லையென்றால் ஊர் திரும்பிவிடுவது’ என்பதே அவர் முடிவு. மறுநாளோடு அவர் வந்து எட்டு நாட்கள் ஆகி விடுவதனால் அதை நினைத்து, ‘இனியும் தங்குவதில் பயனில்லை’ என்ற கடைசித் தீர்மானத்துடனேயே அவர் இந்த முடிவிற்கு வந்திருந்தார்.

மறுநாள் பொழுது விடிந்தது. ஆனந்தரங்கப் பிள்ளை காலைக் கடன்களை எல்லாம் முடித்துக்கொண்டு சாவகாசமாக அமர்ந்து கொண்டிருந்தபோது மதுரகவிராயர் அவர் முன் தோன்றினார். •

“வந்து..நான் ஒரு அவசரக் காரியமாக உங்களிடம் உதவிபெற்றுப் போக வந்தேன். வந்து ஏழு எட்டு நாட்கள் ஆகிவிட்டன. இப்போது இங்கே சந்தர்ப்பம் சரியாக இல்லை என்று தெரிகிறது.நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.”

புலவர் நிறுத்தி நிறுத்தி வார்த்தைகளைத் தயக்கத்தோடு வெளியிட்டார். வள்ளல் தலை நிமிர்ந்து சினத்துடனே அவரைப் பார்த்தார். கண்களிலும் முகத்திலும் சினச்சாயை தென்பட்டது.

“ஏன் ஐயா பறந்து தொலைக்கிறீர்?” ஆத்திரத்தில் ஆனந்தரங்கர் இப்படிக் கூறிவிட்டார். ஆனால் அந்தச் சொற்கள் புலவர் செவியில் சொற்களாக விழவில்லை.நெருப்புக் கங்குகளாக விழுந்து உள்ளத்தைச் சுட்டன. சொல்லின் அந்தச் சூடு பொறுக்காமல் அவரது தளிர் உள்ளம் கருகியது. வள்ளலுக்கு அதை உணர்த்த விரும்பினார் கவி. சொல்லின் சூடு தெளிவாகத் தெரியும்படி அவரது குறையைத் தம் பாட்டால் சுட்டிக் காட்டினார் கவிராயர்.அந்தப்பாட்டுரங்கப்பிள்ளையை நாணச் செய்துவிட்டது.