பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

95

போலாயிற்று பொறாமையே இயற்கையாகக் கொண்ட கூத்தர் நிலை, மட்டந்{{ தட்டிப் புகழேந்தியை மடக்க முயன்றார் கூத்தர். புகழேந்தி மட்டந் தட்டிக் கூத்தரையே மடக்கிவிட்டார். பிறருக்குத் தீமை எண்ணுபவர்கள் அதைத்தாமே முடிவில் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நியதியோ? என்னவோ?

35. புலவரின் புரட்சி

அன்று காளமேகம் திருமலைராயன் பட்டினத்திற்கு வருகின்ற நாள். அவரை உள்ளே விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று அவ்வூர்க் கவிஞர்கள் யாவரும் அதிமதுரக்கவிராயரின் தலைமையில் ஒன்று சேர்ந்து அவரைப் பயமுறுத்தி விரட்ட ஊர் எல்லையிலேயே கூடி விட்டார்கள். ‘கூட்டமாக வந்திருக்கும் தாங்கள் அத்தனை பேரும் திருமலைராயன் பட்டினத்துக் கவிஞர்கள் என்பதை அறிந்து கொண்டதுமே காளமேகம் அஞ்சிப்போவார்’ என்று அவர்கள் மனக் கோட்டை கட்டினர். இந்தத் துணிச்சலில், காளமேகத்தைக் கண்டதும் தாவிப்பாய்ந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

தம் சிந்தனையின் போக்கிலே ஆழ்ந்தவாறே சாலையில் வந்து கொண்டிருந்த காளமேகத்திற்கு ஒன்றுமே புரியவில்லை.

“நீங்கள் எல்லாம் யார்? எதற்காக வழியோடு போகிற என்னை இப்படி வளைத்துக்கொண்டு நிற்கிறீர்கள்? விஷயத்தைச் சொல்லுங்கள்!” கணீரென்று வெண்கலக் குரலில் இப்படிக் கேட்டார் காளமேகம்.

“நாங்களா? நாங்கள் எல்லாம் திருமலைராயன் பட்டினத்துக் கவிராயர்கள்.” வளைத்துக் கொண்டிருந்தவர்கள் மறுமொழி கூறினார்.

காளமேகத்திற்கு அடக்க முடியாதபடி சிரிப்பு வந்துவிட்டது. வாய்விட்டு விஷமத்தனமாகச் சிரித்துக்