பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
96
தமிழ் இலக்கியக் கதைகள்
 

கொண்டே, "அடடா! நீங்கள் கவிராயர்களா? (கவிஎன்று சொல்லுக்குக் 'குரங்கு' என்றும் ஒரு பொருள் உண்டு) நான் வெறும் மனிதர்கள் என்று அல்லவா தவறாக எண்ணி விட்டேன்” என்றார். மேலும், “நீங்கள் கவிராயர்கள் ஆனால் அதற்குரிய படி தோற்றம் இல்லையே"

“வால்எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன்னிரண்டு

கால்எங்கே? உட்குழித்த கண்எங்கே? சாலப்

புவிராயர் போற்றும் புலவீர்காள்! நீவிர்

கவிராயர் என்றிருந்தக் கால்”

என்று பாடிப் பரிகசித்தார். சுற்றியிருந்த புலவர்கள் அத்தனை பேரும் முகத்தில் விளக்கெண்ணெய் வழிய நின்றார்கள். ஆனால், காளமேகம் அதோடு விட்டு விடுபவராகத் தெரியவில்லை. அவர்களை நோக்கியபடியே, "ஆமாம்! நீங்கள் கவிராயர்கள் என்று சொல்லிவிட்டீர்கள். 'நான் யார்? என்று உங்களுக்குச் சொல்லவில்லையே! கேளுங்கள். நானும் ஒரு கவிஞன்தான். ஆனால் உங்களைப் போல அல்ல. எப்படிப்பட்ட கவிஞன் தெரியுமா? சொல்லுகிறேன், கேட்க வேண்டும்” என்று திரும்பவும் பாட ஆரம்பித்துவிட்டார்.

"இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும்

அம்மென்றால் ஆயிரம் பாட்டாகாதோ - கம்மா

இருந்தால் இருந்தேன் எழுந்தேனே ஆயின்

பெருங்காள மேகம் பிளாய்”

காளமேகம் இப்படித் தற்புகழ்ச்சியாகக் கூறியபாடலைக் கேட்டதும் கூட்டத்தின் முன்னணியில் நின்ற அதிமதுரத்திற்கு அவமானமும் கோபமும் உண்டாகிவிட்டது. தங்கள் கூட்டத்தைக் கண்டே ஓடிப்போவான் என்று எண்ணியதற்கு மாறாகக் காளமேகம் துணிவாகத் தங்கள் முன்நின்று தங்களையே தாழ்த்திப் பேசுகிறானே? என்று நினைந்து மனம் கொதித்தது அதிமதுரத்திற்கு