பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
97
 

"ஒய் காளமேகம். நான் யார் தெரியுமா உமக்கு! நான்தான் 'அதிமதுரம்' எனக்கு இணையான புலவனே இந்தப் பக்கத்தில் கிடையாது! வீணாக யாரிடம் மோதிக் கொள்கின்றோம் என்று தெரியாமல் பின்பு திண்டாட வேண்டாம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளும்!"

அதிமதுரம் ஆத்திரம் பொங்கும் குரலில் இவ்வாறு கூறியதும் முன்னைக் காட்டிலும் உரத்த குரலில் கலகல வென்று சிரித்தார் காளமேகம்,

"ஓஹோ நீர்தானா அந்த அதிமதுரம்? உம்மை தெரியாமல் இருக்குமா என்ன? நன்றாகத்தெரியுமே! எனக்கே தெரிய வில்லையானால் வேறு யாருக்குத்தான் உம்மைப்பற்றி தெரியப் போகிறது? உம்மைப்பற்றி நான் அறிந்ததைச் சொல்லுகிறேன், கேளும்: -

அதிமதுரம் என்றே அகிலம் அறியத்

துதி மதுர மாயெடுத்துச் சொல்லும் - புதுமை என்

காட்டுச் சரக்குலகிற் காரமில் லாச்சரக்குக்

கூட்டுச் சரக்கெனவே கூறு.”

அதிமதுரம் - அரத்தை, வசம்பு இவைகளைப் போல ஒரு காட்டு மருந்துச் சரக்கிற்குப் பெயர்.

காளமேகப் புலவர் அதிமதுரத்தைப் பற்றிய தம் பாடலைக் கூறி முடித்தார். அதிமதுரம் வெலவெலத்துப் போனார். மற்றவர்கள் நடுங்கி ஓடுவதற்குத் தயாராகி விட்டனர். 'உண்மையிலேயே இது பெரிய சண்டமாருதம்தான், இதனிடம் நம் முயற்சி பலிக்காது’ என்று அப்போதுதான் திருமலைராயன் பட்டினத்துக் கவிராயர்களுக்குப் புரிந்தது.

காளமேகத்தைப் புரட்டுசெய்து ஓட்டுவதற்கு வந்த அவர்கள் காளமேகத்தின் புரட்சியிலே சிக்கிக் கருத்தழிந்து தாங்களே திரும்பி ஓட வேண்டியதாயிற்று. அவர் பாடல்கள் அவர்களை அவ்வாறு அஞ்சி நெஞ்சு குலைந்து ஒடும்படியாகச் செய்துவிட்டன.

உபூ-7